வானவில் : குழந்தைகளுக்கு கதை சொல்லும் ரோபோ


வானவில் : குழந்தைகளுக்கு கதை சொல்லும் ரோபோ
x
தினத்தந்தி 29 Aug 2018 1:16 PM IST (Updated: 29 Aug 2018 1:16 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் உள்ள நிறுவனம் குழந்தைகளுக்கான சிறிய ரோபோவை உருவாக்கியுள்ளது.

இந்த ரோபோ குழந்தைகளுக்கு கதை சொல்லும். பாட்டு பாடும். குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லித் தரும். இதற்கு ‘கோடி’ (Codi) என பெயரிட்டுள்ளது இந்நிறுவனம்.

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு முறையில் செயல்படும் விதமாக இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைக்கு நீங்கள் என்ன சொல்லித் தர விரும்புகிறீர்களோ அதை மொபைல் போன் வழியே இந்த ரோபோவுக்கான கட்டளையாக உள்செலுத்தி குழந்தைகளுடன் உரையாட வைக்கலாம். இது குழந்தைகள் பெரிதும் விரும்பும் வகையில் எடை குறைவாக, அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர் தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

காலையில் கண் விழித்ததும் காலை வணக்கம் சொல்லி குழந்தைகளுடனான பேச்சைத் தொடரும் இந்த ரோபோ, குழந்தைகள் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளை அடுத்தடுத்து கூறும். அதாவது பல் துலக்குவது, குளிப்பது, ஆடை அணிவது, காலை உணவு சாப்பிட்டுப் பள்ளிக்கு புறப்படுவது என அனைத்துப் பணிகளையும் கூறும். காலை உணவு சாப்பிடும் நேரத்தில் குழந்தைகளுக்குப் பிடித்தமான கதைகளைக் கூறும். நடனம் ஆடுவதற்கான பாடலைப் பாடும். இரவு படுக்கச் செல்லும் முன்பு பல் துலக்கச் சொல்வது மற்றும் மெல்லிய இசையை இசைத்து குழந்தைகளை தூங்க வைப்பது என அனைத்து பணிகளையும் இது செய்யும். இரவு நேரத்தில் இதை சார்ஜ் செய்து விட்டால் மறு நாள் காலையில் குழந்தைகளுடன் உரையாட, கதை சொல்ல தயாராகிவிடும்.

இது வை-பை இணைப்பில் செயல்படுவதால், குழந்தைகளுக்கு விருப்பமான பாடல், கதைகளை புதிது புதிதாக அவர்கள் விரும்பும் வகையில் கூறும். குழந்தைகளின் வயதுக்கேற்ப அவர்களுக்கு விருப்பமானவற்றை இது கூறும். இதற்கான மென்பொருளை நிறுவனமே இலவசமாக தேவைப்படும்போது அப்கிரேடு செய்து தரும். இதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரையில்தான் இந்த ரோபோ பயன்படும் என்பதல்ல. குழந்தைகள் வளர, வளர அவர்களின் வயதுக்கேற்ப இந்த ரோபோவும் தன்னை உயர்த்தி கொள்ளும்.

தங்கள் குழந்தைகள் எந்தெந்த விளையாட்டை தேர்வு செய்கிறார்கள், எதை விரும்புகிறார்கள் என்பதை பெற்றோர்கள் செயலி (ஆப்) மூலம் அறிந்து கொள்ளலாம். குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப செயல்படவும் இது உதவுகிறது.

இதன் உயரம் 8.5 அங்குலம். இதில் கறை படியாத ஏ.பி.எஸ். பிளாஸ்டிக் அதாவது மிருதுவான நீண்ட காலம் உழைக்கக் கூடிய பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உள்ளனர். இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்துமே தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவை. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ, அவர்கள் எளிதில் கையாளும் வகையிலும், அவர்களுக்கு பிடித்தமான வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் பல குழந்தைகளின் கருத்துப்படியே இதை உருவாக்கியிருக்கிறார்கள். செல்போன், டேப்லெட், வீடியோ கேம்ஸ், வீடியோ பார்ப்பது, டி.வி. பார்ப்பது போன்றவைதான் இப்போது நவீன குழந்தைகளின் பொழுதுபோக்காக மாறி வருகிறது.

பெரும்பாலான குழந்தைகள் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவற்றுக்கு அடிமையாகி வருவதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் குழந்தைகள் குறித்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து குழந்தைகளை காக்கும் விதமாக கதை சொல்லும் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு நாளில் 7 மணி நேரத்தை குழந்தைகள் டி.வி. பார்ப்பது உள்ளிட்ட நவீன பொழுதுபோக்கு மின்னணு கருவிகளில் செலவிடுவதாக தெரியவந்துள்ளது. இது குழந்தைகளின் இயல்பான மூளை வளர்ச்சியை பாதிப்பதோடு கண்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதிக நேரம் டி.வி. பார்ப்பதால் குழந்தைகளுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திட்டமிடுதல், எந்த விஷயத்திற்கு முன்னுரிமை தருவது, ஒரு விஷயத்தை எவ்விதம் அணுகுவது உள்ளிட்ட விஷயங்களை இந்த ரோபோ கற்றுத் தரும்.

இந்த ரோபோவானது குழந்தைகள் செல்போன் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுவித்து உரையாடும் திறனையும், கதை கேட்கும் திறனையும் வளர்க்குமாம். மேலும் குழந்தைகளின் வயது, படிப்பிற்கேற்ப அவர்களுக்கு தேவையானவற்றை அளிப்பது கோடி ரோபோவின் பிரதான பணி. பள்ளிகளில் குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படும் ரைம்ஸ், பாடல்கள் உள்ளிட்டவற்றையும் இது பாடிக்காட்டும்.

ஒருகாலத்தில் குழந்தைகளுக்கு வீடுகளில் கதை சொல்வதற்கு தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் இருப்பார்கள். இப்போது கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து அவரவர் தனித் தனியே வாழும் நிலை உருவாகிவிட்டது. பொருள்தேடும் பொருட்டு கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தமும் உள்ளது. இத்தகைய சூழலில் குழந்தை வளர்ப்பு மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. இதுபோன்ற சிக்கலை சமாளிக்க இந்த ‘கோடி’ ரோபோ ஓரளவிற்கு உதவும்.

இன்னமும் சோதனை ரீதியில் உள்ள இந்த ரோபோ, அடுத்த ஆண்டு அமெரிக்காவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ரோபோவை மேம்படுத்தும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Next Story