கிராம தூய்மை பட்டியலில் தேனி இடம் பிடிக்க செயலி மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும், கலெக்டர் வேண்டுகோள்
கிராம தூய்மைக்கான பட்டியலில் தேனி மாவட்டம் இடம் பிடிப்பதற்கு தூய்மைக்கான செயலி மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேனி,
இந்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைக்கான செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. ‘ஷிஷிநி18‘ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் தூய்மை இந்தியா திட்டம் செயல்பாடு குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்.
தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியதில் ஒவ்வொரு கிராமத்தின் பொதுவான தூய்மை எவ்வளவு மேம்பட்டுள்ளது, திடக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதில் கிராம அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், திரவக் கழிவுகளை அப்புறப்படுத்த கிராம அளவிலான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்பன போன்ற கருத்துக்களை பதிவு செய்யும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
ஆன்டிராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் இந்த செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, கிராமத் தூய்மைக்கான பட்டியலில் தேனி மாவட்டத்தை இடம்பெறச் செய்வதற்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். அதிக அளவில் பொதுமக்கள் கருத்துகள் தெரிவிப்பதன் மூலம் தேனி மாவட்டத்தை இந்த பட்டியலில் இடம் பெறச் செய்திட முடியும். ஆன்டிராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.