திண்டுக்கல் என்ஜினீயரை கரம்பிடித்த ஜெர்மனி ஆசிரியை: தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது
திண்டுக்கல் என்ஜினீயரை கரம்பிடித்த ஜெர்மனி ஆசிரியை திருமணம் நேற்று காலை திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் முறைப்படி நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மூக்கன் ஆசாரி சந்துவை சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் துணை இயக்குனர் ராஜசேகர்– விஜயா தம்பதியின் மகன் நவீன்சேகரன் (வயது 31). இவர், கோவையில் என்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு, எம்.எஸ். படிப்பதற்காக கடந்த 2011–ம் ஆண்டு ஜெர்மனி சென்றார். படிப்பு முடிந்தவுடன் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
அப்போது, டியுப்ளிட்ஸ் பகுதியை சேர்ந்த பென்கார்டு–ஆக்னஸ் ஹெப்ரல் தம்பதியின் மகள் தெரசா ஹெப்ரலுக்கும் (26), நவீன்சேகரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. தெரசா ஹெப்ரல் பி.ஏ. (ஜெர்மன்) படித்துவிட்டு அங்குள்ள பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவருக்கு தமிழ் கலாசாரம் மிகவும் பிடித்து போனதால் நவீன்சேகரனுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.
இதையடுத்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், இருவரும் வெவ்வேறு மதம், நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் பெண்ணின் பெற்றோரிடம் பேசி நவீன்சேகரன் சம்மதம் வாங்கினார். பின்னர், திண்டுக்கல்லுக்கு வந்த அவர் தனது பெற்றோரிடமும் பேசி திருமணத்தை உறுதி செய்தார்.
தெரசா ஹெப்ரல் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதால் திண்டுக்கல்லில் வைத்து திருமணத்தை நடத்த இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, கடந்த 4 நாட்களுக்கு முன்பே ஜெர்மனியில் இருந்து பெண்ணின் பெற்றோர், சகோதரர்கள் மத்தியாஸ், மைக்கில், கிறிஸ்டியான் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உள்பட 35 பேர் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அனைவரும் திருமணத்தின்போது தமிழ் கலாசாரப்படி உடைகள் அணிந்து கொள்வதற்காக தங்களுக்கு பிடித்த பட்டு வேட்டி, சேலைகளை வாங்கி கொண்டனர்.
இதையடுத்து, நேற்று காலை திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நவீன்சேகரன்–தெரசாஹெப்ரல் ஆகியோரது திருமணம் தமிழ் முறைப்படி நடந்தது. தெரசா ஹெப்ரலின் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். பின்னர், மணமகளின் காலில் மணமகன் மெட்டிகளை மாட்டிவிட்டார். தொடர்ந்து, சம்பந்திகள் மாலை மாற்றிக்கொண்டனர். முன்னதாக, மணமகன் தனது பெற்றோரின் காலை கழுவி பாத பூஜை செய்தல் உள்பட பல்வேறு சம்பிரதாயங்கள் நடைபெற்றன.
திருமணம் முடிந்தவுடன் இருதரப்பை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மணமக்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.