மொடக்குறிச்சி அருகே பள்ளிக்கூட மாணவ– மாணவிகளை ஏற்றிச்சென்ற அரசு பஸ் சேற்றில் சிக்கியது


மொடக்குறிச்சி அருகே பள்ளிக்கூட மாணவ– மாணவிகளை ஏற்றிச்சென்ற அரசு பஸ் சேற்றில் சிக்கியது
x
தினத்தந்தி 30 Aug 2018 4:15 AM IST (Updated: 30 Aug 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே பள்ளிக்கூட மாணவ–மாணவிகளை ஏற்றிச்சென்ற அரசு பஸ் சேற்றில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சிக்கும், காட்டுப்பாளையத்துக்கும் இடையே ஓடை செல்கிறது. இந்த ஓடையின் குறுக்கே தூரப்பாளையம் பிரிவு என்ற இடத்துக்கு செல்வதற்காக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அதன் அருகே வயல் வெளியில் மாற்று பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதனால் அந்த பாதையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்பட்டனர். கணபதிபாளையம், மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, பள்ளியூத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு ஈரோட்டில் இருந்து தினமும் ஏராளமான மாணவ–மாணவிகள் சென்று வருகிறார்கள்.

இவர்களின் வசதிக்காக ஈரோட்டில் இருந்து பள்ளியூத்துக்கும் அங்கிருந்து ஈரோட்டுக்கும் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்காக தினமும் காலை, மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் கணபதிபாளையம் நால்ரோடு, சாவடிபாளையம்புதூர் வழியாக மொடக்குறிச்சி வந்து அங்கிருந்து அவல்பூந்துறை வழியாக பள்ளியூத்து செல்கிறது.

அதன்படி நேற்று காலை மாணவ–மாணவிகள் சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் ஈரோட்டில் இருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கணபதிபாளையம் அருகே காட்டுப்பாளையம் பாலம் அருகே நேற்று காலை 8.30 மணி அளவில் சென்ற போது சேற்றில் சிக்கிக்கொண்டது. மேற்கொண்டு டிரைவரால் பஸ்சை இயக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கூட வாகனங்கள் வரவழைத்து ஒரு சில மாணவ–மாணவிகள் அதில் ஏறி சென்றனர். சில மாணவ–மாணவிகள் பஸ்சில் இருந்து இறங்கி பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றனர்.

இதையடுத்து ஈரோட்டில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பஸ் மீட்கப்பட்டது. அதன்பின்னரே பஸ் அங்கிருந்து சென்றது. இதனால் அந்த பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story