பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Aug 2018 4:45 AM IST (Updated: 30 Aug 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருமயம் அருகே பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர் களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருமயம்,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீரப்பட்டியை சேர்ந்தவர் நேரு. இவரது மனைவி லாவண்யா (வயது 23). இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேரு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் லாவண்யா வீரப்பட்டியில், வயல்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து லாவண்யா வெளியே வரவில்லை.

மேலும் வீட்டின் பின்புறம் உள்ள வயல் பகுதியில் லாவண்யாவின் குழந்தை அழுதுகொண்டு கிடந்தது. இதைக்கண்டு அவ்வழியாக சென்றவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, லாவண்யா பின்பக்க தலையில் காயத்துடன் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த லாவண்யாவின் உறவினர்கள் அவரது வீட்டின் முன்பு கூடினர்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது, வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த பணமும், லாவண்யா அணிந்திருந்த நகைகளும் மாயமானது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் மார்சல் வரவழைக்கப்பட்டது. அது, லாவண்யாவின் உடலை மோப்பம் பிடித்தவாறு வீட்டில் இருந்து வெளியே வந்து, வயல், வாய்க்கால் கரை, வேப்பம்பட்டி முக்கம் வரை சென்று விட்டு, பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து படுத்து கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து போலீசார் லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து போலீசார் கூறுகையில், “லாவண்யாவின் வீடு வீரப்பட்டியில் உள்ள வயல்பகுதியில் தனியாக உள்ளது. வீட்டை சுற்றி வேறு வீடுகள் கிடையாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம். மேலும் லாவண்யா நகைகளை கொடுக்க மறுத்து போராடவே ஆத்திரத்தில் மர்மநபர்கள் அவரை அடித்து கொன்று விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம். லாவண்யா கொலை செய்யப்பட்டது குறித்து வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் நேருவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை வந்து விட்டார். அவரிடம் முழுமையாக விசாரித்தால் தான், வீட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது, லாவண்யா என்னென்ன நகைகள் அணிந்திருந்தார் என்பது தெரியவரும்” என்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்து, பெண்ணை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story