பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்


பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்
x
தினத்தந்தி 30 Aug 2018 4:00 AM IST (Updated: 30 Aug 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பெரம்பலூர் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நேற்று முன் தினம் நடந்தது. அதனை பெரம்பலூர் மாவட்ட கல்வி அதிகாரி அம்பிகாபதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிரமணியராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நேற்று மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தன. இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 100, 200, 400, 800, 1,500, 3000 மீட்டர் ஓட்டமும், 100 மீட்டர் தடை ஓட்டமும், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளும், 19 வயதிற்குட்பட்டோருக்கான 100, 200, 400, 1,500, 3000, 5000 மீட்டர் ஓட்டம், 100, 110, 400 மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளும் நடை பெற்றன.

பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடகள போட்டிகளில் ஆர்வத் துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினார். தடகள போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் குறுவட்ட செயலாளர் கண்ணன், இணை செயலாளர் அதியமான் ஆகியோர் செய்திருந்தனர்.

பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் வருகிற 6-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெறவுள்ள பெரம்பலூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது.

Next Story