எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்ப்போம், எல்லாவற்றுக்கும் நாங்கள் தலையாட்டுவதில்லை - முதல் அமைச்சர் பேட்டி


எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்ப்போம், எல்லாவற்றுக்கும் நாங்கள் தலையாட்டுவதில்லை - முதல் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 30 Aug 2018 4:45 AM IST (Updated: 30 Aug 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இந்த ஆண்டு 62 தடுப்பு அணைகள் கட்ட ரூ.292 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக சிதம்பரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சிதம்பரம்,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து திருக்கடையூருக்கு சிதம்பரம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு மாலை 3–45 மணிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இயற்கை சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போது, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது இயற்கை. தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இதில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இதுதவிர உள்ளாட்சித்துறை சார்ந்த சிறிய, பெரிய ஏரிகளும் அதிகமாக உள்ளன. பருவகாலத்தில் பெய்யும் மழை நீரை முழுவதும், சேமித்து வைக்கத்தான் குடிமராமத்து திட்டபணிகளை தொடங்கினோம். இந்த பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வெற்றி கரமாக நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து இத்திட்டத்தை வரவேற்று உள்ளனர்.

மேலும் இந்த திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த ஆண்டு 328 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளோம். மேலும் இதில் 1,515 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. குடிமராமத்து பணியை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் முழுக்க, முழுக்க விவசாய பிரதிநிதிகளை கொண்டு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலமாக குடிமராமத்து பணிகளை எடுத்து செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் மூலம் பல்வேறு ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை அந்தந்த பாசன பகுதிகளுக்கு உள்பட்ட விவசாயிகள் மூலம் செயல்படுத்தி வருகிறோம்.

மழை காலங்களில் ஓடை, நதி போன்றவற்றில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து நிறுத்தி நிலத்தடி நீரை சேமிப்பதற்காக 3 ஆண்டு கால திட்டமாக ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த ஆண்டு 62 தடுப்பு அணைகள் கட்ட 292 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளோம். இந்த பணிகள் எல்லா மாவட்டத்திலும் எங்கெல்லாம் தடுப்பு அணைகள் கட்ட வேண்டுமோ அந்த பகுதிகளில் ஆய்வு செய்து கட்டப்படும்.

எதிர்க்கட்சி எப்படிவேண்டுமானாலும் பேசலாம். அவர்கள் எங்களை பாராட்டியா பேசப்போகிறார்கள். ஜெயலலிதா வழியைத்தான் இந்த அரசும் பின்பற்றுகிறது. எதை எதிர்ப்போமோ அதை எதிர்ப்போம். எல்லாவற்றுக்கும் நாங்கள் தலையாட்டுவது கிடையாது. தி.மு.க. 14 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள், என்ன திட்டத்தை கொண்டு வந்தார்கள். அவர்களால் காவிரி நதிநீர் பிரச்சினையை கூட தீர்த்து வைக்க முடியவில்லை.

2007–ல் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வந்த போது கூட தி.மு.க. தலைவர், மகன், பேரன் எல்லோரும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். அவர்கள் நினைத்து இருந்தால் நிச்சயம் செய்திருக்கலாம். அப்போது கூட அவர்களால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

தற்போது அம்மா அரசு சட்டப்போராட்டம் நடத்தி விவசாயிகளின் உரிமையை பெற்றுத்தந்தார்கள். காவிரி மேலாண்மைவாரியத்துக்கு தி.மு.க. எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை அம்மா அரசு தான் பெற்றுத்தந்து உள்ளது. அதில் தி.மு.க. கொஞ்சம் கூட ஈடுபடவில்லை. முயற்சியும் எடுக்கவில்லை, சரியானபடி அக்கறை காட்டவும் இல்லை. பதவி, ஆட்சி இதை பற்றி நினைத்தார்களே தவிர தமிழக மக்கள் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.

அம்மாவின் அரசு தான் இந்த பணிகளை நிறைவேற்றி விவசாயிகளுக்கு காவிரிநீரை பெற்றுத்தந்து உள்ளது. கால்வாய், ஏரி, குளம், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு உள்ளது. ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது அருண்மொழிதேவன் எம்.பி., சந்திரகாசி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் பாண்டியன், முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக கடலூர் மாவட்ட எல்லையான ஆல்பேட்டையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் சம்பத் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் எம்.சி.சம்பத்தும், கலெக்டர் அன்புசெல்வனும் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதேப்போல் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சால்வை கொடுத்தனர்.

அதேப்போல் குறிஞ்சிப்பாடியிலும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

அவரது வருகையையொட்டி வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்(பொறுப்பு), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story