கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக அன்புசெல்வன் பதவி ஏற்பு, வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என பேட்டி
கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக வெ.அன்புச்செல்வன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன் என்று அவர் கூறினார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய தண்டபாணி இடமாற்றம் செய்யப்பட்டு அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய வெ.அன்புசெல்வன் கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 9–50 மணி அளவில் கடலூர் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா(பொறுப்பு கலெக்டர்) பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பின்னர் புதிய கலெக்டர் வெ.அன்புசெல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பெருமை மிக்க கடலூர் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய கலெக்டராக செயல்படுவேன். அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கிற வளர்ச்சிப்பணிகளை துரிதமாக செயல்படுத்தி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.
கடலூர் மாவட்டம் தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதால் முதல்–அமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் தொலைநோக்கு பார்வையோடு பல்வேறு நடவடிக்கைகள், வளர்ச்சிப்பணிகள் இங்கு நடைபெற்று வருவதை உணர்ந்து உள்ளேன். அதனை வருகிற பருவமழை தொடங்குவதற்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் அனைத்து துறை அதிகாரிகளுடைய ஒத்துழைப்போடு நிறைவேற்றி கடலூர் மாவட்ட மக்களுக்காக தொடர்ந்து என்னுடைய பணி அமையும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் வெ.அன்புசெல்வன் கூறினார்.
இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா நதியம் கிராமம். இவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.யூ.சி. படிப்பும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பி.காம், எம்.காம். படிப்பும், சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டப்படிப்பும் படித்துள்ளார். 1986–ம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற்றார்.
பின்னர் விழுப்புரத்தில் பயிற்சி சப்–கலெக்டராகவும், தொடர்ந்து சப்–கலெக்டராக மதுராந்தகத்திலும் பணியாற்றினார். பின்னர் சென்னை மாநகராட்சியில் துணை கமிஷனராகவும், சென்னையில் கலெக்டராகவும் பணியாற்றினார். அங்கிருந்து மாற்றலாகி கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
அவரை சப்–கலெக்டர் சரயூ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.