சாலையோரம் பூ விற்ற சிறுமியிடம் காரை நிறுத்தி பேசிய குமாரசாமி ஸ்ரீரங்கப்பட்டணாவில் நெகிழ்ச்சி சம்பவம்


சாலையோரம் பூ விற்ற சிறுமியிடம் காரை நிறுத்தி பேசிய குமாரசாமி ஸ்ரீரங்கப்பட்டணாவில் நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 30 Aug 2018 4:00 AM IST (Updated: 30 Aug 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கப்பட்டணாவில் ‘வாசமில்லா மலர் இது... வசந்தத்தை தேடுது‘ என்ற பாடலுக்கு ஏற்ப குடும்ப சூழ்நிலையில் சாலையோரம் சிறுமி பூ விற்றாள். அவளை பார்த்த முதல்–மந்திரி குமாரசாமி காரை நிறுத்தி அவளிடம் பேசினார். இருவருக்கும் இடையேயான உரையாடல் நெகிழ்ச்சியாக இர

பெங்களூரு, 

ஸ்ரீரங்கப்பட்டணாவில் ‘வாசமில்லா மலர் இது... வசந்தத்தை தேடுது‘ என்ற பாடலுக்கு ஏற்ப குடும்ப சூழ்நிலையில் சாலையோரம் சிறுமி பூ விற்றாள். அவளை பார்த்த முதல்–மந்திரி குமாரசாமி காரை நிறுத்தி அவளிடம் பேசினார். இருவருக்கும் இடையேயான உரையாடல் நெகிழ்ச்சியாக இருந்தது.

கூட்டணி ஆட்சியின் 100–வது நாள்

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றன. முதல்–மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமி இருந்து வருகிறார். இந்த கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் (வியாழக்கிழமை) 100–வது நாளை பூர்த்தி செய்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை ராமநகர் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை பகுதியை நோக்கி முதல்–மந்திரி குமாரசாமி சென்றார். அப்போது மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா டவுனில் சாலையோரம் 8 வயது சிறுமி ஒருவள் பூவிற்பனை செய்து கொண்டிருந்தாள்.

காரை நிறுத்திய குமாரசாமி

இதை பார்த்த குமாரசாமி, உடனே தனது காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறினார். அதன்படி டிரைவரும் காரை நிறுத்தினார். பின்னர் பூ விற்ற சிறுமியிடம் குமாரசாமி நைசாக பேச்சுக்கொடுத்தார். ஆனால் தன்னிடம் கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி தான் பேசுகிறார் என்பதை அந்த சிறுமி அறிந்திருக்கவில்லை.

அவர்கள் இருவருக்கும் இடையே நெகிழ்ச்சியான உரையாடல்கள் நடந்தன. அதுபற்றி விவரம் வருமாறு:–

ஏன் பள்ளிக்கு செல்லவில்லை

குமாரசாமி:– நீ ஏனம்மா... பள்ளிக்கு செல்லவில்லையா?. ஏன் பூ விற்கிறாய்.

சிறுமி:– எனது பள்ளிக்கு இன்று (அதாவது நேற்று) விடுமுறை. அதனால் பூ விற்பனை செய்கிறேன்.

குமாரசாமி:– ஹா...ஹா... என சிரித்துவிட்டு, இந்த சிறுவயதிலேயே பூ விற்று கஷ்டப்படுகிறாயே...?

சிறுமி:– எனது குடும்ப சூழ்நிலையால் தான்.... எனது தாயும், தந்தையும் வீட்டில் இருந்து பூக்களை கட்டி தருகிறார்கள். நான் விடுமுறை நாட்களில் பூ விற்பனை செய்து என்னால் ஆன உதவிகளை அவர்களுக்கு செய்கிறேன்.

இதை கேட்ட முதல்–மந்திரி குமாரசாமி சில வினாடிகள் அமைதியாக சிறுமியை பார்த்தபடியே இருந்தார். ஆனால் சிறுமியோ பூ விற்பனை செய்வதிலேயே முழுகவனமுமாக இருந்தாள்.

நீங்கள் யார்?

இறுதியாக குமாரசாமி, சிறுமியே இங்கே வா... என அழைத்து அவளிடம் தனது செல்போன் எண்களை கொடுத்தார். மேலும் அந்த செல்போன் எண்ணை உனது தந்தையிடம் கொடு. உனது தந்தையை எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து பேச சொல் என்று குமாரசாமி கூறினார்.

அதற்கு சிறுமி, நீங்கள் யார்?, எதற்காக என்னிடம் செல்போன் எண் கொடுத்தீர்கள்? என்று கேள்வி கேட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத குமாரசாமி, நான் தான் முதல்–மந்திரி குமாரசாமி. நான் கொடுத்த செல்போன் எண்ணை உனது தந்தையிடம் கொடு. உனது கல்விக்காக நான் உதவி செய்கிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றார்.

இவ்வாறு பூ விற்கும் சிறுமிக்கும், குமாரசாமிக்கும் இடையேயான உரையாடல் நெகிழ்ச்சியாக அமைந்தது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்த சிறுமிக்கு, முதல்–மந்திரியின் கருணையால் வசந்தம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story