கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா பகல் கனவு காண்கிறது சித்தராமையா குற்றச்சாட்டு


கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா பகல் கனவு காண்கிறது சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Aug 2018 3:00 AM IST (Updated: 30 Aug 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா பகல் கனவு காண்பதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.

பெங்களூரு, 

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா பகல் கனவு காண்பதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.

முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

மீண்டும் முதல்–மந்திரியாவேன்

இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று நான் முன்பு கூறினேன். தற்போது நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று எங்கும் சொல்லவில்லை. மக்கள் ஆசிர்வதித்தால் மீண்டும் முதல்–மந்திரியாவேன் என்று தான் சொன்னேன். இந்த கருத்துக்கு பல்வேறு அர்த்தங்களை கற்பிக்க வேண்டாம். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் எந்த கடிதமும் எழுதவில்லை.

பா.ஜனதாவினர் தேவை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். நான் முதல்–மந்திரியாக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் இந்த கூட்டணி அரசு நிதியை ஒதுக்கி வருகிறது. அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

கருத்துவேறுபாடு இல்லை

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மந்திரிகளும் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள். எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவில் சேர்ந்து கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. அது தவறானது.

கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. கூட்டணி ஆட்சியில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அதன் பயன் கூட்டணியில் உள்ள 2 கட்சிகளுக்கும் சேரும். நான் மீண்டும் முதல்–மந்திரியாவேன் என்று கூறிய கருத்துக்கு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது?.

பகல் கனவு காண்கிறார்கள்

அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் மீண்டும் முதல்–மந்திரியாவேன். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் பகல் கனவு காண்கிறார்கள். அந்த கனவு பலிக்காது. ஆட்சியில் எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு முன்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதனால் ஆட்சியில் காங்கிரஸ் புறக்கணிப்படுவதாக கூறுவது அர்த்தமற்றது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story