போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.13,500 கோடியில் பெங்களூருவில் வெளிவட்டச்சாலை பரமேஸ்வர் பேட்டி
ரூ.13,500 கோடி செலவில் பெங்களூருவில் வெளிவட்டச்சாலை அமைக்கப்படும் என்று துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
ரூ.13,500 கோடி செலவில் பெங்களூருவில் வெளிவட்டச்சாலை அமைக்கப்படும் என்று துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
8,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு...பெங்களூருவில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் தனியார் நிறுவனங்கள் கேபிள் வயர்களை பதித்து இருப்பதாக புகார்கள் வந்தன. இதனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய வரி வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அனுமதி பெறாத தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்களை துண்டிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெங்களூருவில் இதுவரை 8,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு கேபிள் வயர்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இனி அனுமதி பெறாமல் கேபிள் வயர்களை பதிக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஒருவேளை மீண்டும் சட்டவிரோதமாக கேபிள் வயரை பூமியில் பதித்தால் அத்தகைய நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டுமனைகள் ஒதுக்கீடுஅதே போல் புதிய விளம்பர கொள்கையை வகுத்து இருக்கிறோம். அதற்கு மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. பெங்களூருவில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டுள்ளன. இப்போது பெங்களூரு பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கிறது. இது தொடர்பாக மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்த கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பெங்களூரு கெம்பேகவுடா லே–அவுட்டில் வீட்டுமனைகளை ஒதுக்கீடும் செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும். குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி செலவில் வெளிவட்டச்சாலை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட சாலைஇதில் ரூ.5 ஆயிரம் கோடி சாலை அமைக்கும் பணிகளுக்கும், மீதமுள்ள ரூ.8,500 கோடி நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கும் செலவிடப்படுகிறது. இந்த பணிகளை துரிதகதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பெங்களூருவில் 2 மார்க்கத்தில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 100 நாட்களில் எங்கள் கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் எனக்கு முழு திருப்தியை அளிக்கிறது. கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகளுக்கு 10–க்கு 10 மதிப்பெண்கள் வழங்குகிறேன்.
உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் வாரிய தலைவர்கள் நியமன பணிகள் மேற்கொள்ளப்படும். எங்கள் கட்சியை சேர்ந்த மந்திரிகளின் செயல்பாடுகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை மதிப்பிடும்படி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். அதன்படி மந்திரிகளின் செயல்பாடுகள் மதிப்பிடப்படுகிறது.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்தராமையா தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா செல்கிறார். அவருடன் எங்கள் கட்சியை சேர்ந்த சிலர் செல்வதாக சொல்கிறீர்கள். இது அவரது தனிப்பட்ட பயணம்.
என்ன தவறு உள்ளது?மீண்டும் முதல்–மந்திரி ஆவேன் என்று சித்தராமையா கூறி இருப்பதில் என்ன தவறு உள்ளது?. இந்த கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அவரே கூறி இருக்கிறார். அதனால் யாரும் தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.