வெள்ளம்- நிலச்சரிவால் உருக்குலைந்த குடகில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு
வெள்ளம்- நிலச்சரிவால் உருக் குலைந்த குடகில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குடகு,
வெள்ளம்- நிலச்சரிவால் உருக் குலைந்த குடகில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கொட்டி தீர்த்த கனமழை
குடகு மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இந்த பேய் மழைக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மடிகேரி தாலுகாவில் முக்கொட்லு, கல்லூர், மக்கந்தூர், அட்டிஒலே, சுண்டிகொப்பா, சித்தாபுரா, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. சுமார் 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் வெள்ளம், நிலச்சரிவால் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து விட்டது. மேலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் காபி தோட்டங்களும் நாசமாகியுள்ளன.
இந்த மழைக்கு 924 வீடுகள் சேதமடைந்துள்ளன. 186 வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகின. 2,225 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் மண் அரிப்பாலும், நிலச்சரிவாலும் சேதமாகியுள்ளது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. அதுபோல் 240 பாலங்களும் சேதமாகியுள்ளது.
மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்
குடகில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் பல்வேறு துறைகள் சார்பிலும் தனித்தனியாக குடகில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அரசு சார்பில் குடகில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.3 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. தற்போது குடகில் சேதமடைந்த சாலைகள் மற்றும் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. முக்கிய சாலையான மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மண்அரிப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கியும், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் பொக்லைன் எந்திரம் உதவியுடனும் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கனமழையால் வீடுகள், உறவுகள், உடைமைகளை இழந்த சுமார் 5 ஆயிரம் பேர் 51 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து சுமார் 2 ஆயிரம் பேர் தங்களது வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். வீடுகளை இழந்த 3 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கியிருந்து வருகிறார்கள். முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் வெள்ளம்-நிலச்சரிவு பாதிப்பில் இருந்து வெளிவர புத்துணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வு
குடகில் கொட்டி தீர்த்த கனமழைக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் மாயமாகியுள்ளனர். அவர்களது உடல்களை ஹெலிகேமராக்கள் உதவியுடன் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குடகில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மழை பெய்யாத இடங்களில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அரசு சார்பில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அன்புகுமார், சாருலதா சோமல் ஆகியோர் மடிகேரி அருகே காலேபீடு கிராமத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பணிகளை துரிதமாக முடிக்கும்படி உத்தரவிட்டனர். அதையடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்புகுமார், தாசில்தார் குசுமா ஆகியோர் மக்கந்தூரில் நடந்து வரும் மீட்பு பணிகள், நிவாரண பணிகளையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே
இதற்கிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட காபி தோட்டங்களையும், வயல்வெளிகளையும் மாநில தோட்டக்கலைத் துறை இயக்குனர் ஒய்.எஸ்.பட்டேல் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி முதல்-மந்திரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மாநில வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே நேற்று குடகிற்கு வந்தார். அவர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து குடகில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் மடிகேரியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவித்யா, எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சன், மேல்-சபை உறுப்பினர் சுனில் சுப்பிரமணி, வீணா அக்ஷயா கலந்துகொண்டனர்.
4 பேரின் உடல்கள் தேடும் பணி
கூட்டத்திற்கு பிறகு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை வெள்ளம் பாதித்த குடகு, ஹாசன், சிக்கமகளூரு, தட்சிணகன்னடா, உடுப்பி, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.200 கோடி விடுவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குடகிற்கு மட்டும் ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. குடகில் மட்டும் 186 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன. மேலும் 924 வீடுகள் சேதமாகியுள்ளது. இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட வேண்டியதுள்ளது. இதனால் ஹெலிகேமரா உதவியுடன் தேடுதல் பணி நடந்து வருகிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
3-வது நாளாக மழை
குடகில் கடந்த 27-ந்தேதி முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மடிகேரி தாலுகாவில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. ஆனால் நேற்று அந்தப் பகுதியில் மழை இல்லை. இருப்பினும் பாகமண்டலா, தலைக்காவிரி பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் காவிரி ஆற்றில் மீண்டும் காட்டாற்று வெள்ளம் கரைபுரளும் நிலை உள்ளது. இதனால் காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பீதியில் உள்ளனர்.
இதற்கிடையே குடகு மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மடிகேரியில் 83.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்எச்சரிக்கை நடவடிக்கை
மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மடிகேரி, விராஜ்பேட்டை தாலுகாக்களில் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் குளோரின் பவுடர் தூவப்பட்டு வருகிறது. மேலும் திறந்தவெளி கிணறுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story