ரூ.1¼ கோடியில் குழந்தைகள் போக்குவரத்து பூங்காவை மேம்படுத்த திட்டம் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்


ரூ.1¼ கோடியில் குழந்தைகள் போக்குவரத்து பூங்காவை மேம்படுத்த திட்டம் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்
x
தினத்தந்தி 30 Aug 2018 4:30 AM IST (Updated: 30 Aug 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.1¼ கோடியில் குழந்தைகள் போக்குவரத்து பூங்காவை மேம்படுத்துவதற்காக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

திருச்சி,

திருச்சியில் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5 ஆயிரத்து 79 சதுர மீட்டரில் குழந்தைகள் சாலை விதிகள் போக்குவரத்து பூங்கா 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் தற்போதுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் இட வசதிகள் குறைவாக உள்ளதால் அதிகமான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் 1¼ ஏக்கர் பரப்பளவில் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா மேம்படுத்தப்பட உள்ளது.

இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள், அதிநவீன கழிப்பறை, எல்.இ.டி. விளக்குகள், பயிற்சி கூடம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதி, சாலைவிதிகளை கடைபிடித்தல் பற்றிய விளம்பரங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன. இந்த பூங்கா பொதுமக்கள் பங்களிப்புடன் தன்னிறைவுத்திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் மேம்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். குமார் எம்.பி., மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், “தற்போது அடிக்கல் நாட்டப்படுகிற போக்குவரத்து பூங்காவானது சிறுவர்கள் முதல் 16 வயதிற்குட்பட்ட அனைவரும் போக்குவரத்து விதிகள் கற்று தருவதற்காக கொண்டு வரப்படுகிறது. இந்த பூங்கா புதுப்பொலிவு பெற்றவுடன் மாணவ, மாணவிகளை பள்ளிக்குச் சென்று அழைத்து வந்து இங்கு போக்குவரத்து விதிகள் பற்றி வகுப்புகள் கற்றுதரப்படும் என்றார்.

விழாவில் போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் பேசும்போது, “விபத்துக்கு நேரம், காலம் என்பது கிடையாது. எந்த நேரத்திலும் விபத்து ஏற்படலாம். திருச்சி மாநகர பகுதிகளில் மட்டும் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் 782 பேர் காயம் அடைந்துள்ளனர். 139 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு அமர்ந்துள்ள உங்களின் நண்பர்களோ, உறவினர்களோ, தெரிந்தவர்களோ ஏதாவது ஒரு வகையில் சாலை விபத்தை சந்தித்து இருக்கக்கூடும். சாலை விபத்து என்பது நம் எல்லோரையும் பாதிக்க கூடியதாக இருக்கிறது. நாம் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தோமானால் விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்“ என்றார்.

விழாவில் போலீஸ் துணை கமி‌ஷனர்கள் நிஷா, மயில்வாகனன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் துணை தலைவர் பிரபுநாகராஜ் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து பூங்கா அடிக்கல் நாட்டு விழாவையொட்டி இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆண், பெண் போலீசார் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.

இந்த போக்குவரத்து பூங்கா மேம்படுத்தும் பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும், இங்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு போக்குவரத்து விதிகள் குறித்து இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story