எட்டயபுரம் அருகே கார்கள் மோதல்; 3 பேர் படுகாயம்


எட்டயபுரம் அருகே கார்கள் மோதல்; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Aug 2018 4:00 AM IST (Updated: 30 Aug 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

எட்டயபுரம், 

எட்டயபுரம் அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாட்டு வியாபாரி

எட்டயபுரம் அருகே துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் செந்தில்குமார் (வயது 35). இவர் கரூரில் மாடுகளை மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் நடந்த உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, நேற்று காலையில் கரூரில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். அப்போது அவர் தன்னுடைய நண்பர்களான கரூரைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் பெனடிக் டான்போஸ்கோ (36) உள்ளிட்ட 3 பேரை காரில் அழைத்து வந்தார்.

எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை-தாப்பாத்தி இடையே நாற்கர சாலையில் குண்டும் குழியுமான இடங்களில் சீரமைப்பு பணிகள் நடந்தது. இதற்காக அனைத்து வாகனங்களும் ஒரே பாதையில் திருப்பி விடப்பட்டது.

கார்கள் மோதல்

காஞ்சீபுரம் மாவட்டம் மேகரைகுப்பத்தைச் சேர்ந்தவர் பழனி (41). இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தங்களது ஊருக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். மதியம் எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் செந்தில்குமாரின் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் செந்தில்குமார், பெனடிக் டான்போஸ்கோ, பழனி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த 3 பேருக்கும் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story