திருவல்லிக்கேணியில் மந்திரவாதியை எரித்துக்கொன்ற பெண் பிடிபட்டார்
சென்னை திருவல்லிக்கேணியில் மந்திரவாதியை எரித்துக்கொன்ற பெண்ணை போலீசார் நேற்று பிடித்தனர்.
சென்னை,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் செய்யது பஸ்ருதீன் (வயது 63). இவர் மாந்திரீகம் செய்வதோடு குறிசொல்லும் தொழிலும் செய்து வந்தார். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது.
அங்கு, தொழில் அபிவிருத்தி, குடும்ப பிரச்சினையால் தவிப்பவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாந்திரீக தகடு மற்றும் தாயத்து தயாரித்து கொடுப்பார்.
கடந்த திங்கட்கிழமை அன்று இரவு தனது கட்டிடத்தில் செய்யது பஸ்ருதீன் குறி சொல்லிக்கொண்டு இருந்தார். அவரது முன்பு ஏராளமான பெண்களும், ஆண்களும் அமர்ந்து இருந்தனர்.
அவர் முன்னால் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் பர்தா அணிந்திருந்தனர். அதில் பர்தா அணிந்திருந்த பெண் ஒருவர் திடீரென ஒரு மர்மப்பொருளை செய்யது பஸ்ருதீன் மீது வீசினார். அது எளிதில் தீப்பிடிக்கக்கூடிய ‘பாஸ்பரசாக’ இருக்கலாம் என்று தெரிகிறது.
அந்த பொருள் பட்டதும், செய்யது பஸ்ருதீன் உடல் முழுக்க தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அவர் தீயில் கருகி படுகாயமடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
தப்பி ஓட்டம்
செய்யது பஸ்ருதீனை கொலை செய்த பர்தா அணிந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கியபிரகாசம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
செய்யது பஸ்ருதீன் கொலை செய்யப்பட்டபோது, பர்தா அணிந்திருந்த 10 பெண்கள் சம்பவ இடத்தில் இருந்தனர். அவர் களில் ஒரு பெண்தான் கொலையாளி பெண் ஆவார். பர்தா அணிந்த 9 பெண்களை போலீசார் விசாரணை நடத்திவிட்டனர். ஒரேயொரு பெண் மட்டும் போலீஸ் விசாரணையில் சிக்காமல் இருந்து வந்தார்.
பெண் பிடிபட்டார்
அந்த பெண் தான் கொலையாளி பெண்ணாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். அந்த பெண் சென்னை ஐஸ்அவுசில் வசிக்கிறார். போலீசார் அவரிடம் விசாரிக்க சென்றபோது அவர் வீட்டில் இல்லை. இதனையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மந்திரவாதியை எரித்துக்கொன்ற பெண் நேற்று இரவு பிடிபட்டார். அவரது பெயர் நபீன்தாஜ் (40). அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பேசினார். இதனையடுத்து நபீன்தாஜை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடிக்கிறாரா? அல்லது உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர் தானா? என்று தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story