நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்
நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது.
நெல்லை,
நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது.
வகுப்பு தொடக்க விழா
நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிவடைந்து நேற்று வகுப்பு தொடங்கியது. இதற்கான தொடக்க விழா மற்றும் கணினி மயமாக்கப்பட்ட நூலக திறப்பு விழா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேராசிரியை சண்முகப்பிரியா வரவேற்றார்.
நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் கலந்து கொண்டு கணினி மயமாக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தும், முதலாம் ஆண்டு வகுப்பை தொடங்கி வைத்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள், ஆனால் தற்போது நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறும் அளவுக்கு நூலகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வக்கீல் தொழிலிலும் போட்டிகள் வந்து விட்டது. ஒரு வக்கீல் முறையாக வழக்கு நடத்தவில்லை என்றால், அந்த வழக்கை வேறு வக்கீலுக்கு மாற்றவும், முறையாக வழக்கை நடத்தாத வக்கீல் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரும் அளவுக்கு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. சட்டம் படிப்பதன் மூலம் நீதிபதி பணியிடங்கள் உள்பட பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. எனவே சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே ஆர்வத்துடன் படித்தால் எளிதில் வெற்றி பெறலாம்.
உடனடி வாய்ப்புகள்
சமீபத்தில் 320 நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. வழக்கமாக ஒரு பணியிடத்தை நிரப்ப நேர்முகத்தேர்வுக்கு 3 பேரை அழைக்கும்படி போட்டி இருக்கும். ஆனால் 320 பணியிடங்களுக்கு 600 பேர் மட்டுமே வந்திருந்தனர். எனவே சட்டப்படிப்பை நல்லமுறையில் படித்தவர்களுக்கு உடனடி வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் பேசுகையில், “நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு வகுப்பில் சேருவதற்கு 1,140 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 154 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்து உள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழகத்தில் மாணவர் சேர்க்கையில் சென்னைக்கு அடுத்தபடியாக நெல்லை அரசு சட்டக்கல்லூரியைத்தான் மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்” என்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் கிறிஸ்து ஜோதி, ஜீவரத்தினம், சுந்தர்ராஜன், லட்சுமி விசுவநாத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story