சென்னை சென்டிரலில் சிக்கினார் ரெயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது


சென்னை சென்டிரலில் சிக்கினார் ரெயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2018 5:12 AM IST (Updated: 30 Aug 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு ரெயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் சிக்கினார்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை தீவிர கண்காணிப்புக்கு பிறகே உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர். மேலும், நடைமேடைகளிலும் பாதுகாப்பு படையினர் அவ்வப்போது தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாலையா மற்றும் போலீசார் சென்டிரல் ரெயில் நிலையத்தின் நடைமேடைகளில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது 8-வது நடைமேடையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

5 கிலோ கஞ்சா

மேலும், அந்த நபர் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த குணசேகரன் (வயது 58) என்பதும், சந்திரகாச்சியில் இருந்து சென்னை சென்டிரல் வந்த ரெயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட குணசேகரனையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

Next Story