சிரிப்பின் மூலம் சிந்திக்க வைத்த கலைவாணர்


சிரிப்பின் மூலம் சிந்திக்க வைத்த கலைவாணர்
x
தினத்தந்தி 30 Aug 2018 12:08 PM IST (Updated: 30 Aug 2018 12:08 PM IST)
t-max-icont-min-icon

இன்று (ஆகஸ்டு 30-ந்தேதி) கலைவாணர் நினைவு தினம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1908-ம் ஆண்டில் நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரி என்னும் புறநகர்ப்பகுதியில் சுடலைமுத்து-இசக்கி தம்பதியினர் 30-8-1908 அன்று ஓர் ஆண் குழந்தையைப் பெற்றனர்.

அப்போது அந்தக் குழந்தை உலகெங்கும் புகழ்பெற்ற கலைச்சுடராக விளங்கும் என எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். உலகம் முழுமையும் அவரைக் கலைவாணர் என்று அழைத்து மகிழ்ந்தது. இன்றும் அவரது கலைப்பணிக்காகவும் சமூக சேவைக்காகவும் கொடைப் பண்புக்காகவும் போற்றப்பட்டு வருகிறார்.

பெற்றோர் வைத்த பெயர் கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்று பொருள்படும் ஆங்கில முதலெழுத்துக்களால் என்.எஸ்.கே. என்று அழைக்கப்பட்டார். அவருடைய கொடைப்பண்புக்காக ‘கர்ணன்’ எனப் போற்றப்பட்டார்.

பொதுவாகத் திரைப்படங்களிலும் நாடகங் களிலும் சிரிப்பு நடிகர் என்றாலே கோமாளி என்றும் பப்பூன் என்றும் அழைக்கப்படுவது வழக்கம். அந்த வழக்கத்தை மாற்றி, சிரிப்பு நடிகர் கதாநாயகராக நடிப்பவருக்கு இணையாக மதிக்கப்படும் நிலையை உருவாக்கினார். சிரிக்கவைத்துச் சிந்திக்கத் தூண்டும் அவரது நடிப்பு திரைப்படங்களை எல்லாம் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாடங்களாக மாற்றியது.

நகைச்சுவை மூலம் நல்ல கருத்துகளைப் பரப்பினார். மூடநம்பிக்கைகளைச் சாடினார். முற்போக்கு எண்ணங்களை விதைத்தார். பொழுதுபோக்கு எனக் கருதப்பட்ட திரைப்படம் அவர் நடிப்பால் அறிவுபுகட்டும் சாதனமாக மாறியது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருடன் கலைவாணருக்கு இருந்த தொடர்பு சிறப்பானது.

1939-ல் வெளிவந்த ‘மாணிக்கவாசகர்’ படத்தில் கலைவாணர் சீர்திருத்தக் கருத்துகளைச் சிறப்பாகப் பரப்பும் விதத்தைப் பார்த்து அண்ணா மகிழ்ந்தார். பெரியாரிடம் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ‘மக்கள் மனத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை அவர்கள் மனத்தில் பதியுமாறு சிறப்பான கலைப்பணி புரிந்து வருபவர்’ எனக் கலைவாணரைப் பெரியாரிடம் அறிமுகப்படுத்தினார்.

‘நான் கல்லடியும் சொல்லடியும் பட்டு மூன்று மணிநேரம் தொண்டைகிழியப் பேசியும் எவ்வளவு பேர் என் கருத்தை ஏற்றார்கள் எனத் தெரியாமல் போகிறது. அதையே என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாவில் சொல்கிறார். மக்கள் காசு கொடுத்துச் சினிமா பார்த்து மகிழ்ச்சியாக இந்தக் கருத்துகளையெல்லாம் நன்கு தெரிந்துகொள்கிறார்கள். நான் நூறு கூட்டங்களுக்குப் போய் செய்யக்கூடியதை என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தின் மூலம் சாதித்துவிடுகிறார்’ என்று பெரியார் கூறினாராம்.

1957-ல் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அண்ணா காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு வாக்கு சேகரிக்க கலைவாணர் காஞ்சீபுரம் வந்தார். அண்ணாவை எதிர்த்துத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் புகழ்பெற்ற டாக்டர். கலைவாணர் தான் பேசத் தொடங்கியதும் அந்த டாக்டரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போனாராம்.

‘மிகவும் திறமைவாய்ந்த டாக்டர். கட்டணம் வாங்காமல் ஏழைகளுக்கும் மருத்துவம் பார்க்கும் டாக்டர்’ என்றெல்லாம் அவரைப் புகழ்ந்துகொண்டே போனாராம். ‘அண்ணாவுடன் போட்டியிடும் வேட்பாளரைக் கலைவாணர் இப்படிப் புகழ்கிறாரே’ என்று மக்களுக்குத் திகைப்பும் குழப்பமும் ஏற்பட்டது.

பேச்சை முடிக்கும்போது, ‘இவ்வளவு திறமை வாய்ந்த டாக்டரை நீங்கள் காஞ்சீபுரத்தில் வைத்துக் கொண்டால்தானே உங்களுக்கு நல்லது. அவரை எம்.எல்.ஏ. ஆக்கிச் சென்னைக்கு அனுப்பினால் அப்புறம் யார் உங்களுக்கு மருத்துவம் பார்ப்பர்கள்? அவரை இங்கேயே வைத்துக்கொள்ளுங்கள். அண்ணாவை எம்.எல்.ஏ. ஆக்கிச் சென்னைக்கு அனுப்பிவையுங்கள்’ என்றவுடன் எழுந்த கையொலி அடங்க நெடுநேரம் ஆயிற்றாம்.

கலைவாணர் நாடக நடிகராக இருந்தபோது அவர் சக நடிகர்கள் மீது காட்டிய அக்கறையும் தேவைப்படுபவர்களுக்கு அவரின் உதவிக்கரம் நீண்டதையும் உடனிருந்து கவனித்தவர் எம்.ஜி.ஆர். கலைவாணரை எம்.ஜி.ஆர். தனது குருநாதராகப் போற்றினார். கலைவாணர் போலவே சிறந்த கருத்துகளையும், உயர்ந்த எண்ணங்களையும் பரப்பும் கலை வடிவமாகத் தமது திரைப்படங்களை உருவாக்கி வழங்கினார். ‘புரட்சி நடிகர்’ என்று போற்றப்பட்டார். கலைவாணரைப் போலவே எம்.ஜி.ஆரும் அள்ளி வழங்கும் கொடைப்பண்பைத் தமது வாழ்க்கை முறையாக மாற்றிக்கொண்டார்.

கலைவாணர் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாகப் பெரும் முயற்சி மேற்கொண்டார். அவருடைய முயற்சியாலே 12-7-1953 அன்று உருவாக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக 1957-ல் கலைவாணரும், பொருளாளராக எம்.ஜி.ஆரும் சிறந்த பணியாற்றினர்.

கலைஞர் மந்திரி குமாரி என்னும் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியபோது படத்தைப் பார்த்துவிட்டுக் கலைவாணர் மிகவும் பாராட்டினார். அவர் தயாரிக்கும் ‘மணமகள்’ படத்துக்கு திரைக்கதை உரையாடல் எழுதும் வாய்ப்பை வழங்கியதோடு அதற்குரிய ஊதியமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்கினார்.

அந்தக் காலத்தில் திரைக்கதை உரையாடல் எழுதுவதற்கு அவ்வளவு பெரிய தொகை இந்தியாவிலேயே யாரும் கொடுத்ததில்லை. இது கலைஞர் மீதும், அவருடைய தமிழ் மீதும் கலைவாணர் கொண்டிருந்த அன்பையும் ஈடுபாட்டையும் காட்டியது.

கலைஞர் சேலத்திலிருந்து சென்னைக்குத் தமது இல்லத்தை மாற்றிக்கொண்டதற்கும் கலைவாணரே காரணம் என்பதைக் கலைஞர் தமது ‘நெஞ்சுக்கு நீதி’ என்னும் தன்வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வாலாஜா சாலையில் அமைந்திருந்த ‘பாலர் அரங்கம்’ கலைஞர் ஆட்சியில் ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயரிடப்பட்டதன் மூலம் கலைவாணர் மீது கலைஞர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டை அறிந்துகொள்ளலாம்.

49 ஆண்டுகளே வாழ்ந்த கலைவாணர் ஆயிரக்கணக்கான பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டார். திராவிட இயக்கம், தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்னும் மூன்று இயக்கங்களுமே அவரைப் பெரிதும் கவர்ந்தவையாக விளங்கின. அந்த இயக்கங்களின் தலைவர்கள் மீது அவர் கொண்ட ஈடுபாட்டைப் போலவே அவர்கள் அத்துணைப் பேரும் கலைவாணரைப் பெரிதும் மதித்துப் போற்றினர்.

நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினர் நலனுக்காகவும் அவர் பெரிதும் பாடுபட்டார். யார் வந்தாலும் அள்ளி வழங்கும் வள்ளல் குணம் அவரின் தனிச்சிறப்பு.

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் கலைவாணரைப் பற்றிக் குறிப்பிட்டதை இங்கு நினைவுகூரலாம். ‘தமிழ்க்கலைஞனிலும் ஒருவன் ஒரு கோடியை அடுத்துப் பொருள் திரட்டினான். ஆனால் அவன் அத்தனையும் பிறர்க்கு வழங்கி உயிர்துறந்தான் என்று வரலாறு எழுதப்பெறுமேயானால் அது என்.எஸ்.கே. ஒருவரையே குறிக்கும்’ என்றார்.

கலைவாணரின் பொதுவாழ்வுக்கும் கொடையுள்ளத்துக்கும் தூணாய் அமைந்து துணைபுரிந்த அவரது துணைவியார் டி.ஏ.மதுரம் ஒப்பற்ற கலைஞராகவும், எடுத்துக்காட்டான வாழ்க்கைத் துணைவியாகவும் வரலாறு படைத்தார். 1936 முதல் 1957 வரை கலைவாணரும், டி.ஏ.மதுரமும் ஜோடியாக 122 படங்களில் நடித்துள்ளார்கள். இது தமிழ்த்திரைப்பட வரலாற்றில் மட்டுமின்றி உலகத்திரைப்படவரலாற்றிலும் பொறிக்கப்படவேண்டிய ஒப்பற்ற சாதனையாகும்.

கலைவாணர் தமது திரைப்படங்களின் மூலம் தரமிக்க நகைச்சுவையை வழங்கினார். மூடநம்பிக்கைகளைப் போக்கும் பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்தார்.

தமிழ் மொழியின் தனிச்சிறப்புகளை எடுத்துரைத்தார். காந்தி, பெரியார் என்னும் சான்றோர்களின் அறிவுரைகளைப் பரப்பினார். ஆண்-பெண் சமத்துவத்துக்கும் அடித்தள மக்கள் உயர்வுக்கும் உரிமைக்குரல் முழங்கினார்.

1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி அவர் மறைந்தபோது அகிலமே துயரத்தில் ஆழ்ந்தது. ஒரு தலைசிறந்த கலைஞரை, கொடைப்பண்புக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த வள்ளலை, தன்னைப்போல் எண்ணற்ற நகைச்சுவை நடிகர்களை உருவாக்கி வழங்கிய ஆசானை, பேசியதைப் போல் வாழ்ந்துகாட்டிய சிந்தனையாளரைத் தமிழ்நாடு இழந்தது.

கலைவாணர் மறைந்தாலும், தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார். அவர் வழங்கிய சிந்தனைக் குவியல் நமக்கு என்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காக இருக்கிறது. ஏழ்மையும் அறியாமையும் அறவே இல்லாத சிறந்த நிலையை அடையப் பாடுபடுவதே அவருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும்.

- பேராசிரியை அன்புக்கொடி நல்லதம்பி

(கட்டுரையாளர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மருமகள்) 

Next Story