வால்பாறையில் குடியிருப்புக்குள் நுழைந்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம்


வால்பாறையில் குடியிருப்புக்குள் நுழைந்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 31 Aug 2018 3:45 AM IST (Updated: 31 Aug 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை நகர் பகுதி குடியிருப்புகளுக்குள் நுழைந்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இதனால் அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வால்பாறை,

மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக வனப்பகுதிகளில் யானை, சிறுத்தைப்புலி, காட்டெருமைகள், பாம்புகள், கரடிகள், செந்நாய்கள், சிங்கவால் குரங்குகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் வால்பாறை நகர் பகுதியை ஒட்டிய வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதிகள், அதனை ஒட்டிய வனப்பகுதியில் அதிகளவில் சிங்கவால் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த சிங்கவால் குரங்குகள் வால்பாறை நகர் பகுதியை ஒட்டியுள்ள காமராஜ்நகர், பி.ஏ.பி.காலனி ஆகிய இரண்டு குடியிருப்புகளுக்குள் மட்டுமே நுழைந்து அட்டகாசம் செய்தன. தற்போது 10-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் கூட்டம் கடந்த 10 நாட்களாக வால்பாறை நகர் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

சிங்கவால் குரங்குகள் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து வீட்டிலிருக்கும் பொருட்களை உடைத்து சேதப்படுத்துகின்றன. சாப்பாடு, தின்பண்டங்களை எடுத்து சென்று விடுகின்றன. வீட்டின் கூரை மீது ஏறி, ஓடுகள், கண்ணாடிகள், தொலைபேசி மற்றும் கேபிள் டிவியின் ஓயர்களை சேதப்படுத்துகின்றன. இது தவிர நகர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் இருக்கும் பொருட்களையும் சேதப்படுத்துகின்றன.

சில நேரங்களில் சாலைகளில் நடந்து செல்பவர்களை துரத்துகின்றன. இதனால் நடந்து செல்வோர் குரங்கு வந்துவிடுமோ? கடித்து விடுமோ? என்கிற அச்சத்துடன் செல்கின்றனர். இதற்கிடையில் குரங்குகள் சண்டையிட்டுக்கொண்டு, சாலைகளில் அங்குமிங்கும் ஓடி வாகனங்களின் குறுக்கே விழுந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. பொதுமக்கள் மீதும் விழுந்து விடுகின்றன. இதில் வாகனங்களில் அடிபட்டு குரங்குகளும் காயமடைவதோடு உயிர்சேதமும் ஏற்படுகின்றன.

குறிப்பாக பள்ளிக்கூடங்கள் கல்லூரி விடும் நேரத்தில் குரங்குகள் அணிவகுத்து வருவதால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். சாலை ஓரங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் உள்ள பொருட்களை குரங்குகள் கிளறி எடுத்து சாப்பிடும் போது, அங்கு வருகின்ற தெரு நாய்களுக்கும் குரங்குகளுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.

ஆகவே சிங்கவால் குரங்குகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, பொருளாதார இழப்பும் ஏற்படுகின்றன. எனவே வால்பாறை வனச்சரக வனத்துறையினர் வால்பாறை நகர் பகுதிக்குள் முகாமிட்டு உள்ள, சிங்கவால்குரங்குகளை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளில் கொண்டு போய்விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story