மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தவித்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபரை கரம் பிடித்தார்


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தவித்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபரை கரம் பிடித்தார்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:00 AM IST (Updated: 31 Aug 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தவித்து வந்த இளம்பெண் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட வாலிபரை திருமணம் செய்துகொண்டார்.

குடகு, 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தவித்து வந்த இளம்பெண் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட வாலிபரை திருமணம் செய்துகொண்டார்.

திருமண நிச்சயம்

குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஏராளமான கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சோமவார்பேட்டை தாலுகா அட்டிஒலே கிராமம் உருக்குலைந்து போய்விட்டது. அங்கு வசித்து வந்த மக்கள் வீடுகளை இழந்து மடிகேரியில் உள்ள முகாம்களில் தங்கி இருந்து வருகிறார்கள். இதற்கிடையே அட்டிஒலே கிராமத்தை சேர்ந்த உமேஷ்-பத்மினி தம்பதியின் மகள் குசுமா என்பவருக்கும், மடிகேரி தாலுகா அரைக்காடு கிராமத்தை சேர்ந்த தனஞ்செய் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களுக்கு பெற்றோர்களும், பெரியோர்களும் ஆகஸ்டு 30-ந்தேதி (அதாவது நேற்று) திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

மழையால் பரிதவிப்பு

இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெள்ளம்-நிலச்சரிவு ஆகியவை அட்டிஒலே கிராமத்தை புரட்டிப்போட்டது. இதில் குசுமாவின் வீடும் சிக்கி இடிந்துபோனது. இதனால் குசுமாவும், அவரது பெற்றோரும் அரசின் நிவாரண முகாமில் தஞ்சமடைந்தனர். வெள்ளத்தால் வீடு, உடைமைகளை இழந்த குசுமா தனக்கு நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடைபெறுமா? என்ற ஏக்கத்தில் இருந்து வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தனஞ்செய் மற்றும் அவரது பெற்றோர், குசுமாவுக்கு ஆறுதல் கூறினர். மேலும் நிச்சயிக்கப்பட்ட படி திருமணம் நடைபெறும் என்று கூறினர். இதையடுத்து குசுமா நிம்மதி பெருமூச்சுவிட்டார். இருப்பினும் திருமண செலவுக்கு என்ன செய்வது? என குசுமாவும், அவரது பெற்றோரும் யோசித்தபடி இருந்தனர். இதற்கிடையே குடகு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட குசுமா, மஞ்சுளா, ரஞ்சிதா உள்பட 3 பெண்கள் பரிதவித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதை அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி அரசு சார்பில் 3 பேரின் திருமண செலவுக்காக தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க கலெக்டர் ஸ்ரீவித்யாவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அரசின் உதவித்தொகை குசுமா உள்பட 3 பேருக்கும் வழங்கப்பட்டது.

திருமணம் நடந்தது

மேலும் இந்து அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் குசுமாவின் திருமணத்திற்கு உதவி செய்தனர். அதைதொடர்ந்து நேற்று குசுமா- தனஞ்செய் ஆகியோருக்கு மடிகேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்தில் முகாம்களில் தங்கியிருந்த மக்களும், அரசு அதிகாரிகளும், பல்வேறு அமைப்பினரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் நடந்த மகிழ்ச்சியில் குசுமா ஆனந்த கண்ணீர் வடித்தார். அவரை புதுமாப்பிள்ளை தனஞ்செய் மற்றும் குடும்பத்தினர் ஆசுவாசப்படுத்தினர்.

ஏற்கனவே கடந்த 26-ந்தேதி மஞ்சுளாவுக்கும், கேரளாவை சேர்ந்த ராஜீசுக்கும் அரசு மற்றும் பொதுநல அமைப்பினர் உதவியுடன் திருமணம் நடந்தது. தற்போது குசுமா-தனஞ்செய் தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. ரஞ்சிதாவுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story