தமிழகத்திற்கு 310 டி.எம்.சி. நீர் திறந்துவிடப்பட்டுள்ளது மேகதாதுவில் புதிய அணை விரைவாக கட்டப்படும்
மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் மேகதாதுவில் புதிய அணை விரைவாக கட்டப்படும் என்றும், தமிழகத்திற்கு இதுவரை 310 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் மேகதாதுவில் புதிய அணை விரைவாக கட்டப்படும் என்றும், தமிழகத்திற்கு இதுவரை 310 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக மருத்துவ கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாதுவில் புதிய அணை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 67 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு புதிய அணை கட்டுவோம். அதில் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு போக மீதமுள்ள நீர் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் தமிழகத்திற்கு நீர் வழங்க முடியும். 4 ஆயிரம் ஏக்கர் நிலம் அணை தேக்க நீரில் மூழ்கும். இதில் வனம், வருவாய் மற்றும் விவசாய நிலங்கள் அடங்கும். நடப்பு ஆண்டில் இதுவரை 310 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த காலக்கட்டத்தில் 82 டி.எம்.சி. நீர் மட்டுமே திறந்துவிட்டு இருக்க வேண்டும். ஆனால் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ரூ.6,000 கோடி செலவாகும்
புதிய அணை கட்ட ரூ.6,000 கோடி நிதி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் நோக்கத்திற்காக தான் மேகதாதுவில் மாநில அரசு அணை கட்டுகிறது. மேகதாதுவுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளோம். கால்வாய்களில் தண்ணீரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். 4 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.
கால்வாயின் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் ஆகும். ஏரிகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நீர்ப்பாசன திட்டம் குறித்து நீர்வள நிபுணர்கள், நீர்ப்பாசன போராட்டக்காரர்கள் ஆகியோரிடம் இருந்து ஆலோசனை பெற்றுள்ளோம். நீர்ப்பாசனம் குறித்து ஒரு கருத்தரங்கை நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஆவண படம்
கர்நாடகத்தில் முக்கியமான அணைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதனால் ஹெலிகேமராவை பயன்படுத்தி ஆவண படம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். அணையின் பாதுகாப்பு, ஆக்கிரமிப்பு போன்ற அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும். கால்வாய்களை அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துள்ளது. ஒரு சிறிய அதிருப்தி கூட எழவில்லை. அரசு சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது.
இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story