தபால்காரர் மூலம் வீட்டு வாசலில் வங்கி சேவை திட்டம் நாளை தொடக்கம் அஞ்சல்துறை தலைவர் பேட்டி


தபால்காரர் மூலம் வீட்டு வாசலில் வங்கி சேவை திட்டம் நாளை தொடக்கம் அஞ்சல்துறை தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 30 Aug 2018 10:45 PM GMT (Updated: 30 Aug 2018 8:27 PM GMT)

தபால்காரர் மூலம் வீட்டு வாசலில் வங்கி சேவை திட்டம் நாளை தொடங்கப்படுகிறது என்று அஞ்சல்துறை தலைவர் அம்பேஷ் உப்மன்யு கூறினார்.

திருச்சி,

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் வங்கிகளுக்காக நகர்ப்புறங்களை நாடிவரும் நிலை உள்ளது. இந்தநிலையை போக்கும் வகையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி(ஐபிபிபி) என்ற புதிய நடமாடும் வங்கி சேவை திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி புதுடெல்லியில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த வங்கி கணக்கை தொடங்க முன்பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஜீரோ பேலன்ஸ் முறையில் வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம்.

முதல் கட்டமாக திருச்சி மத்திய மண்டலத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் 12 கிளைகளில் இணைக்கப்பட்ட 60 அஞ்சல் அலுவலகங்கள் நாளை திறந்து வைக்கப்படும். மீதமுள்ள அஞ்சல் அலுவலகங்கள் வரும் மாதங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைக்கப்படும். இதன் தனித்தன்மை என்பது நமக்கு நன்கு அறியப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த தபால்காரர் மூலம் வீட்டு வாசலில் வங்கி சேவையை கொடுப்பது ஆகும்.

இந்த திட்டம் பணமற்ற பொருளாதாரம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறைவேற்றும். மேலும் சிறு, சிறு செலவினங்களை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செய்வதையும் ஊக்குவிக்கும். இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.1 லட்சம் வரை வைப்புத்தொகையை வைத்து கொள்ளலாம். சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இருக்க தேவையில்லை. அஞ்சலக சேமிப்பு கணக்குகள் வைத்திருப்பவர்கள் அவர்களது மற்ற சேமிப்பு வங்கி கணக்கை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குடன் இணைக்க முடியும். இந்த கணக்கில் இருந்து எஸ்.எஸ்.ஏ., ஆர்.டி., பி.பி.எப்., போன்ற அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்ய முடியும்.

ஆதார் எண்ணை பயன்படுத்தி சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும். “க்யூஆர்” கார்டு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம் உதவியுடன் டிஜிட்டல் பரிமாற்றங்களை செய்ய முடியும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை திருச்சி மத்திய மண்டலத்தில் 6,150 இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் 1,525 கணக்குகளும், காய்கறி விற்பனையாளர்கள் 1,845 கணக்குகளும், சிறுவணிகர்கள் 2,150 கணக்குகளும் தொடங்கி உள்ளனர். நாளை (சனிக்கிழமை) முதல் இந்த வங்கி பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க காத்திருக்கிறது.

திருச்சி மத்திய மண்டலத்தில் அதிகமானோர் கணக்கு தொடங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்றுக்குள்(வெள்ளிக்கிழமை) 30 ஆயிரம் கணக்குகளை தொடங்க இலக்கு நிர்ணயித்து, திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். பிரதமர் நரேந்திரமோடி நாளை புதுடெல்லியில் வங்கி சேவையை தொடங்கி வைத்து, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) மொபைல் செயலியை அறிமுகப்படுத்தும் நிலையில், திருச்சி தலைமை தபால் நிலையம் சார்பில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி அரங்கில் நாளை பகல் 2.30 மணிக்கு நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக குமார் எம்.பி., கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மத்திய மண்டல அஞ்சல்துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ், உதவி இயக்குனர் (வணிக விரிவாக்கம்) குஞ்சிதபாதம் மற்றும் பலர் இருந்தனர்.

Next Story