தொழிலாளி கொலை, நண்பர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் தீர்த்துக் கட்டியதாக வாக்குமூலம்


தொழிலாளி கொலை, நண்பர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் தீர்த்துக் கட்டியதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 31 Aug 2018 5:00 AM IST (Updated: 31 Aug 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலையில் 1,500 அடி பள்ளத்தில் இருந்து உடல் மீட்பு: சுற்றுலா அழைத்து சென்று தொழிலாளியை கொலை செய்த 2 பேர் கைது நண்பர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் தீர்த்துக் கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொடைக்கானல்,

நண்பர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், சுற்றுலா அழைத்து சென்று தொழிலாளியை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொடைக்கானல் மலையில் 1,500 அடி பள்ளத்தில் இருந்து உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். அவருடைய மகன் மணிகண்டன் (வயது 34). இவர், டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் கடந்த 23-ந்தேதி திடீரென மணிகண்டன் மாயமாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டனின் தாயார் வசந்தா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர்.

குறிப்பாக காணாமல் போன அன்று மணிகண்டனின் செல்போனில் பேசிய நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அப்போது, ஜெய்ஹிந்த்புரம் பாரதியார்புரத்தை சேர்ந்த மணிகண்டனின் நண்பரும், கூலித்தொழிலாளியுமான சீனிவாசன் என்பவர் பேசியிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, சீனிவாசன் உள்பட 4 பேர் சேர்ந்து, மணிகண்டனை கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்து சென்று கொலை செய்து விட்டு, மலைப்பகுதியில பிணத்தை வீசி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.

கைதான சீனிவாசன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மதுரை நேருநகரை சேர்ந்தவர் சரவணன். ஷேர் ஆட்டோ ஓட்டும் அவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். அவர், என்னுடைய நண்பர். அவருடைய மனைவி வனிதாவுக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பாக மணிகண்டனையும், வனிதாவையும் சரவணன் கண்டித்தார். இருப்பினும் அவர்களது கள்ளத்தொடர்பு நீடித்தது.

இதனால் மணிகண்டனை கொலை செய்ய சரவணன் திட்டமிட்டார். இது தொடர்பாக அவர் எனது உதவியை நாடினார். என்னுடைய நண்பர்களான மதுரை கீரைத்துரையை சேர்ந்த சபரி, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த மகாராஜன் ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய நானும், சரவணனும் முடிவு செய்தோம்.

சுற்றுலா செல்வது போல, கொடைக்கானலுக்கு மணிகண்டனை அழைத்து சென்று கொலை செய்ய நாங்கள் 4 பேரும் திட்டம் தீட்டினோம். அதன்படி மணிகண்டனை கொடைக்கானலுக்கு அழைத்தோம். நாங்கள் எல்லோரும் நண்பர்கள் என்பதால் அவரும் மறுக்காமல் வருவதாக கூறினார்.

இதனையடுத்து கடந்த 24-ந்தேதி மதுரையில் இருந்து மணிகண்டனுடன், நாங்கள் 4 பேரும் ஒரு காரில் கொடைக்கானல் சென்றோம். கொடைக்கானல் வட்டக்கானலில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினோம். பின்னர் மாலையில், பாம்பார்புரம் நீர்வீழ்ச்சிக்கு சென்று வரலாம் என்று கூறி மணிகண்டனை அழைத்து சென்றோம். அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து மதுபானம் குடித்தோம்.

குறிப்பிட்ட தூரம் வரை காரில் சென்ற நாங்கள், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்றோம். திடீரென நாங்கள் 4 பேரும் சேர்ந்து மணிகண்டனின் வாயை பொத்தி கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தோம். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக 1,500 அடி பள்ளத்துக்குள் உடலை வீசி விட்டோம்.

அதன்பிறகு காரில் கொடைக்கானல் பஸ் நிலையம் வந்த நாங்கள், அதே பகுதியில் உள்ள மற்றொரு விடுதியில் அறை எடுத்து தங்கினோம். இந்தநிலையில் காலையில் எழுந்த நான், அறையில் தங்கியிருந்த சரவணன், சபரி, மகாராஜன் ஆகியோர் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் நானும் கொடைக்கானலில் அறையை காலி செய்துவிட்டு மதுரை வந்து விட்டேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு சீனிவாசன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே சீனிவாசனை கொடைக்கானலுக்கு போலீசார் அழைத்து வந்தனர். மணிகண்டனின் உடல் வீசப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காட்டினார். இதனையடுத்து உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து உடலை மீட்கும் பணி நடந்தது.

மணிகண்டனின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனால் அவருடைய உடல் சாக்குப்பையில் கட்டப்பட்டது. பின்னர் டோலி கட்டி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து மேலே கொண்டு வரப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி ஆகும். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், உள்ளூர் நபரின் உதவி இல்லாமல் அங்கு சென்றிருக்க முடியாது. இது தொடர்பாக சீனிவாசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கொடைக் கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த தனது நண்பரான கூலித்தொழிலாளி எட்வர்ட்ராஜா என்பவர் அந்த இடத்தை தேர்வு செய்து கொடுத்ததாக கூறினார்.

மேலும் அவருடைய காரில்தான் கொலை செய்யப்பட்ட மணிகண்டனை அழைத்து சென்று பல்வேறு இடங்களை கொலையாளிகள் சுற்றி பார்த்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சரவணன், சபரி, மகாராஜன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

துணை நடிகையை 2-வது திருமணம் செய்ய இருந்த கார் டிரைவர் பிரபாகரனை கூலிப்படையினர் கொலை செய்து, கொடைக்கானல் செண்பகனூர் மலைப்பகுதியில் உடலை வீசி சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டீக்கடை தொழிலாளி மணிகண்டனை கொலை செய்து மலைப்பகுதியில் உடல் வீசப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story