தூத்துக்குடியில் 7 ஆயிரம் தபால் வங்கி கணக்கு தொடங்க இலக்கு கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் தகவல்
தூத்துக்குடியில் 7 ஆயிரம் தபால் வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் 7 ஆயிரம் தபால் வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று மாலை தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வங்கி கணக்குதபால் நிலையங்களில் 1–ந்தேதி (சனிக்கிழமை) முதல் வங்கி சேவை தொடங்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம், தூத்துக்குடி மேலூர், ஆரோக்கியபுரம், மீளவிட்டான், சிலுவைப்பட்டி ஆகிய தபால் அலுவலகங்களில் வங்கி சேவை தொடங்கப்படுகிறது. இதுவரை இந்த தபால் அலுவலகங்களில் 752 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இங்கு 7 ஆயிரம் வங்கி கணக்குகள் தொடங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த சேவையில் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டியது இல்லை. இந்தியா முழுவதும் உள்ள எந்த ஒரு ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்’ வங்கியிலும் பணபரிவர்த்தனை செய்து கொள்ளலாம். தபால்காரரே வீட்டுக்கு வந்து வங்கி சேவையை அளிப்பார். இந்திய வங்கித்துறையில் முன்னோடி சேவையாக கியூ.ஆர். கார்டு வசதி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக தலைமை தபால் அலுவலகத்தில் 19 தபால்காரர்களுக்கும், மேலூரில் 16 தபால்காரர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உரிய உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. விரைவில் மாவட்டத்தில் உள்ள 295 தபால் அலுவலகங்களிலும் இந்த சேவை தொடங்கப்படும்.
தொடக்க விழாஇந்த சேவை தொடக்க விழா 1–ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு ஆறுமுகநாடார் ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது. விழாவுக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சேவையை தொடங்கி வைக்கிறார். மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, தூத்துக்குடி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சாந்தகுமார், உதவி கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மேலாளர் பிரான்சிஸ் சேவியர், மனோகர் ஆகியோர் உடன் இருந்தனர்.