உடுமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்: வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
உடுமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மடத்துக்குளம்,
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இதில் காட்டுப்பன்றிகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு இறங்கி, அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. இவ்வாறு பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சிலர் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே மலையை விட்டு கீழ் இறங்கி வரும் காட்டுப்பன்றிகளை பாதுகாப்பது வனத்துறையினருக்கு பெரிய சவாலாக உள்ளது.
இந்த நிலையில் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வசவநாயக்கன்பட்டி பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாட பட்டதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடுமலை வனச்சரகர் தனபாலன் தலைமையில் வனத்துறையினர் வசவநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்து வீட்டில் இருந்து பன்றியை தீயில் சுடும் வாசம் வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு தீயில் வாட்டப்பட்ட நிலையில் பன்றி ஒன்று கிடந்தது. இறைச்சிக்காக வேட்டையாடிய அந்த பன்றியை துண்டு துண்டாக வெட்டி அதை சமைக்க அங்கிருந்த 5 பேர் ஏற்பாடு செய்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் மசக்கவுண்டன்புதூரை சேர்ந்த மதியழகன் (வயது 50), வசவநாயக்கன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (55), ஆறுச்சாமி (40), வீரமுத்து (57), ரங்கசாமி (55) ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் 5 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பின்னர் காட்டுப்பன்றியை கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.
மேலும் வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story