திருப்பூர் மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி தேர்வு: ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு


திருப்பூர் மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி தேர்வு: ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 31 Aug 2018 4:45 AM IST (Updated: 31 Aug 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில், மாதிரி பள்ளியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

திருப்பூர்,

தமிழக அரசு மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 32 பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக அறிவித்துள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திற்கு திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை மாதிரி பள்ளியாக தேர்வு செய்துள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் சுமார் 6 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள்.

திருப்பூர் பகுதியில் அதிக அளவில் மாணவிகள் தேர்வு செய்து படிக்க விரும்பும் இந்தப்பள்ளி திருப்பூர் மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தற்போது பள்ளியில் கட்டமைப்பு வசதிகளை தவிர பள்ளிக்கு வர்ணம் பூசுதல், சுகாதாரம் பேணிகாத்தல், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவற்றுடன் மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த ஸ்மார்ட் வகுப்புகள், நீட், திறனாய்வு தேர்வு போன்ற போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர் தேசிய படை, சாரணீயர் இயக்கம், நாட்டு நலப்பணித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு வசதிகள் இந்த பள்ளிக்கு செய்து கொடுக்கப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் மாதிரிபள்ளியாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்று (நேற்று) முதல் இந்த பள்ளி மாதிரி பள்ளியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த பள்ளி மாதிரியாக இருக்கும்.

இந்த பள்ளிக்கு அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதைக் கொண்டு பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொள்ளலாம். தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இந்த பள்ளியை மாற்றிக்கொள்ளலாம். மேலும் நிதி தேவைப்பட்டால் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமும் நிதி உதவி பெற்று பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story