சான்றிதழ்கள் வழங்க காலதாமதம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


சான்றிதழ்கள் வழங்க காலதாமதம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 31 Aug 2018 3:49 AM IST (Updated: 31 Aug 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் ஆனதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, சாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ் உள்பட பல்வேறு ஆவணங்களை பெறவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒவ்வொரு விதமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 2 நாட்களாக இணையதள சேவை கோளாறு காரணமாக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக இ-சேவை மையம் சரியாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சான்றிதழ்களை பெறுவதற்காக காத்திருந்து பொறுமை இழந்துவிட்டனர்.

நேற்றும் இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் வழங்க தாமதம் ஆகும் என்று ஊழியர்கள் கூறியதால் பொதுமக்கள் கோபமடைந்தனர். உடனே, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்கவும், விரைவாக சான்றிதழ்கள் வழங்கவுமே இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், கட்டணம் செலுத்தியும் சான்றிதழ்கள் வழங்காமல் அலைக்கழிக்கின்றனர். இதன்காரணமாக, பொதுமக்களுக்கு கால விரயம், பயணச்செலவு, உணவுச்செலவு, வேலைக்கு செல்ல முடியாதது போன்ற இழப்புகள் ஏற்படுகிறது. தாமதம் ஏற்படாமல் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதையடுத்து, இ-சேவை மைய அலுவலர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story