பஸ்சில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் பீதியடைந்த பயணிகள், நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு வேண்டுகோள்
பஸ்சில் சென்ற கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி பட்டாக்கத்திகளை தரையில் தேய்த்தவாறு சென்றதால் பயணிகள் பீதி அடைந்தனர்.
செங்குன்றம்,
சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, தியாகராயா கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளுக்கு பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஆரணி, காரனோடை, சோழவரம், அலமாதி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநகர பஸ்களில் சென்று வருகின்றனர்.
இந்த பகுதிகளில் இருந்து வெவ்வேறு பஸ்களில் வரும் மாணவர்கள் செங்குன்றத்தில் இறங்கி, இங்கிருந்து தடம் எண் ‘57-எப்’ மூலம் பாரிமுனை சென்று இறங்குவார்கள். அங்கிருந்து வேறு பல பஸ்களில் கல்லூரிக்கு செல்வார்கள். செங்குன்றத்தில் நிற்கும்போது பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது தகராறில் மோதிக்கொள்வதும், கத்திகளால் வெட்டிக்கொள்வதும் அரங்கேறி வருகிறது.
பட்டாக்கத்திகள்
செங்குன்றத்தில் இருந்து பாரிமுனைக்கு நேற்று 57-எப் தடம் எண் மாநகர பஸ் சென்றபோது முன்பக்க, பின்பக்க படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் சிலர் தொங்கிக்கொண்டு சென்றனர். திடீரென அவர்கள் தொங்கியபடி பட்டாக்கத்திகளை தரையில் தேய்த்தவாறு சென்றனர். இதனால் ரோட்டில் நெருப்பு பொறி பறந்தது.
கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளை வைத்திருந்ததால் பஸ் பயணிகளும், சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் பீதியடைந்தனர். மாணவர்கள் கத்தியை ரோட்டில் உரசிச்சென்ற காட்சியை ரோடுகளில் நின்ற சிலர் செல்போன் மூலம் வீடியோவில் பதிவு செய்தனர்.
வீடியோ பரவியது
இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றிய தகவலின் பேரில் போலீசார் கல்லூரி மாணவர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த பஸ்சில் பயணித்த சிலர் கூறும்போது, “நாங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த வழியாக செல்லும் மாணவர்களை போலீசார் அடிக்கடி சோதனை செய்து கத்திகளை எடுத்துச்செல்லாத வகையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
மின்சார ரெயிலில்
சில மாதங்கள் முன்பு திருவள்ளூர்-மூர்மார்க்கெட் வழித்தட புறநகர் மின்சார ரெயிலில் இதேபோல கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளை நடைமேடையில் உரசிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story