கடலூரில், இடி மின்னலுடன் பலத்த மழை சாலைகளில் மழைநீர்


கடலூரில், இடி மின்னலுடன் பலத்த மழை சாலைகளில் மழைநீர்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:20 AM IST (Updated: 31 Aug 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது, இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடலூர்,

கடலூரில் நேற்று பகலில் வெயில் அடித்தது. பிற்பகலில் கடும் புழுக்கமாக இருந்தது. மாலை 6 மணிக்கு மேல் மேற்கில் இருந்து வானம் இருட்டிக்கொண்டு வந்தது. தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த திடீர் மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். பெரும்பாலானோர் ஆங்காங்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு கடைகளின் ஓரமாக ஒதுங்கி நின்றனர். இதன்பிறகு இரவு 8 மணி அளவில் மழை வெறித்ததும், வீடுகளுக்கு வேகவேகமாக சென்றனர்.

இதன்பிறகு இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகும் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் கடலூர் நகர சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. புதிதாக போடப்பட்டுள்ள நேதாஜி சாலையிலும் மழைநீர் வடிய இடமின்றி தேங்கி நின்றதை காணமுடிந்தது. இதனால் வாகனங்கள் மழைநீரை சீறியடித்தபடி சென்றன. இம்பீரியல் சாலையில் உள்ள கூட்டுறவு அச்சகம் எதிரேயும் மழைநீர் தேங்கி நின்றது. அதேப்போல் பாரதி சாலையிலும் மழைநீர் தேங்கி நின்றது. எனவே மழைநீர் தேங்கிய இடங்களில் சாலையை உயர்த்தி அமைப்பதோடு சரியான முறையில் மழைநீர் வடிகாலும் அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story