தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
மற்றொரு வங்கியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இந்த பகுதியை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், முதியோர் உதவி தொகை பெறுவோர், மாணவ-மாணவிகள், தனியார் மற்றும் அரசு துறையில் பணியாற்றுவோர் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வங்கி கணக்குகளை வைத்துள்ளனர்.
இந்த வங்கி கிளையில் இருந்து சென்னையை சேர்ந்த தனி நபருக்கு கடன் வழங்கிய வகையில் ரூ.12 கோடி வராக்கடன் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. அந்த கடனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசூல் செய்யவில்லை. இதனால் இந்த வங்கியை மூடிவிட்டு சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இயங்கி வரும் பூச்சி அத்திப்பேடு வங்கியுடன் இணைக்க உள்ளதாக வங்கி சார்பில் அறிவிப்பு பலகையில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
முற்றுகை
இந்த நிலையில் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் இயங்கி வரும் இந்த வங்கியை நிரந்தரமாக இயக்கவேண்டும் என்று வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பல்வேறு கட்டமாக தங்களது போராட்டத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வன், வங்கி மேலாளர் தீபா மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பத், வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இங்கு உள்ள வங்கி தொடர்ந்து இங்கேயே செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். வேலூரில் இருந்து கோட்ட மேலாளர் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று உறுதியாக கூறினர். உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்ட மேலாளர் உறுதி கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டத்த்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story