இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அம்பை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அம்பை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 Aug 2018 5:30 AM IST (Updated: 31 Aug 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அம்பை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பை, 

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அம்பை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலவச வீட்டுமனை பட்டா

அம்பை அருகே உள்ளது சிவந்திபுரம் பஞ்சாயத்து. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுமார் 150 பேர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, அம்பை தாலுகா அலுவலகத்திலும், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கடந்த 2014-ம் ஆண்டு கோரிக்கை மனு அளித்து உள்ளனர். அப்போது அதிகாரிகள் தகுதியானவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வீட்டுமனை பட்டா உடனே வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினர்.

முற்றுகை

இந்த நிலையில் அதிகாரிகள் வீட்டுமனை பட்டாக்களை கோரிக்கை மனு வழங்கி சிவந்திபுரம் பொதுமக்களுக்கு வழங்காமல், தகுதியற்ற நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரெபேக்காள், ஜெகதீஸ், நகர செயலாளர் சுரேஷ் மற்றும் அப்பகுதி மக்கள் பலர் அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தாசில்தார் ஜெயலட்சுமி வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இதனால் துணை தாசில்தார் வெங்கடேஷ் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர்கள் தாசில்தாரை பார்க்காமல் செல்ல மாட்டோம் என்றனர். மேலும் தாசில்தார் வரும்வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என்று கூறி தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் ஜெயலட்சுமி மதியம் 2 மணிக்கு தாலுகா அலுவலகத்திற்கு வந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தற்போது தகுதியானவர்களை தேர்வு செய்து தான் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் மீண்டும் மனு அளியுங்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

Next Story