காவனூர் ஊராட்சியில் உள்ள பழுதடைந்த ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
காவனூர் ஊராட்சியில் உள்ள பழுதடைந்த ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையை அடுத்த காவனூர் ஊராட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் திருத்தவெளி, காட்டுப்பாக்கம், காவனூர் பகுதியில் உள்ள மக்களுக்கு காவனூர் மெயின் ரோடு பகுதியில் ரேஷன் கடை உள்ளது.
இந்த பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர்.
பழுதடைந்து உள்ளது
இந்த ரேஷன் கடையின் கட்டிடத்தின் மேல் பகுதி மற்றும் பக்க சுவரில் உள்ள ஜன்னல்கள் உள்ளிட்ட பகுதிகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. ரேஷன் கடை கட்டிடத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து வெறும் கம்பிகள் தெரிந்த நிலையில் உள்ளது.
மழை பெய்யும் போது மழை நீர் சுவர் வழியாகவும் ஜன்னல் வழியாகவும் உள்ளே செல்கிறது. இதனால் மக்களுக்கு வழங்கப்படும் கடையின் உள்ளே உள்ள உணவு பொருட்கள் மீது மழைநீர் பட்டு சேதம் அடைகிறது.
கோரிக்கை
இதனால் மழை நீரில் நனைந்த உணவு பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்று சமைத்து உண்ண வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் உணவு பொருட்கள் வாங்கும் மக்களுக்கும் கடை ஊழியருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுகிறது.
எனவே மக்கள் உண்ணும் உணவு பொருட்களை முறையாக பாதுகாக்கவும் உணவு பொருட்களை வீணாகாமல் தடுக்கவும் இந்த பழைய ரேஷன் கடையை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும். புதிய கட்டிடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story