மழை காலங்களில் மின்னல் தாக்கும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்த வழிமுறைகள்: கலெக்டர் அறிவிப்பு


மழை காலங்களில் மின்னல் தாக்கும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்த வழிமுறைகள்: கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2018 12:11 AM GMT (Updated: 31 Aug 2018 12:11 AM GMT)

மழை காலங்களில் மின்னல் தாக்கும் போது அதில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்த வழிமுறைகளை கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

புயல், வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, இடி மற்றும் மின்னல் போன்ற நிகழ்வுகள் மூலம் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. மிகவும் ஆபத்தான மற்றும் பொதுவான இயற்கை பேரிடர்களில் மின்னலும் ஒன்று. மழை காலங்களில் மின்னல் தாக்கும் போது அதில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்த வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்னல் ஏற்படும் நேரம் மற்றும் இடத்தினை முன்கூட்டியே கணிப்பது சிரமமானது. எனவே, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளிப்புறங்களில் இருக்கும் போது பாதுகாப்பான கட்டிடங்களில் ஒதுங்குவது சிறந்ததாகும். கட்டிடங்கள் இல்லாத பகுதியாக இருந்தால் குகை, அகழி அல்லது பள்ளமான பகுதிகளை தேர்வு செய்து ஒதுங்க வேண்டும்.

இடி சத்தம் கேட்கும் போது தவிர்க்க முடியாத காரணங்களை தவிர முற்றிலும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். காடுகளில் இருக்கும் போது இடி, மின்னல் ஏற்பட்டால் அடர்ந்த சிறிய குட்டையான மரங்கள் உள்ள பகுதிகளில் தங்கலாம். பொதுமக்கள் முடிந்த அளவு வறண்ட பகுதிகளை தேர்வு செய்வது நல்லது.

மின்சாரம் கடத்தும் நெருப்பு, ரேடியேட்டர்கள், அடுப்பு, உலோக குழாய்கள், தொட்டிகள், தொலைபேசிகள் ஆகியவற்றில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஹேர் டிரையர், மின்சார ரேசர்கள், செல்போன், டெலிபோன் ஆகியவைகளை பயன்படுத்தக்கூடாது.

மேலும் சாலை செப்பனிடும் உருளை வண்டி, சரக்கு லாரி மற்றும் பெரிய இரும்பிலான வண்டிகளுக்கு அருகிலும் நிற்கக்கூடாது. கொடி கம்பம், தொலைக்காட்சி ஆண்டனா, உயரமான குழாய்கள் அல்லது இரும்பிலான கோடரி, மண்வெட்டி, ஊஞ்சல் மற்றும் இரும்பு கம்பியுடன் கூடிய குடையை கூட பயன்படுத்தக்கூடாது.

நீரினுள் இருந்தால் அந்த நீர்நிலையை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். களத்து மேடு, வைக்கோல்போர், மரவண்டிகள், கண்காணிப்பு கோபுரங்கள், உயர்ந்த இடங்கள், உயரமாக உள்ள குடிசைகள் மற்றும் தங்கும் இடங்கள் ஆகியவற்றில் இருத்தல் கூடாது. கால்நடைகளை மரத்தடியில் தங்க வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாக்கலாம்.

உயரழுத்த மின் தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்லக்கூடாது. பொதுமக்கள் ஒதுங்குவதற்கு பாதுகாப்பான இடமானது சுவர்கள், கான்கிரீட் கூரைகள், தரைதளத்துடன் கூடிய வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகும். எனவே மின்னல் வரும் சமயங்களில் இந்த வழிமுறைகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story