ராமநாதபுரத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - ஜி.கே.மணி வலியுறுத்தல்


ராமநாதபுரத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - ஜி.கே.மணி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Sept 2018 4:30 AM IST (Updated: 31 Aug 2018 7:49 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்ட விவசாயம் மற்றும் நீர்ஆதாரத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்,

வைகையை காப்போம், வறட்சியை விரட்டுவோம் என்ற பிரசார பயணத்தினை பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராம்தாஸ் எம்.பி. இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) 5 மாவட்டங்களில் நடத்த உள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

 நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப தற்போது நீரின் தேவையும் அதற்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. தமிழக ஆறுகளில் மழைக்காலத்தில் வெள்ளம் வீணாக கடலில் சேருவதும், கோடை காலத்தில் வறட்சியில் வாடுவதுமாக உள்ளது.

தமிழகத்தில் சராசரியாக பெய்யக்கூடிய 960 மில்லி மீட்டர் மழையை ஒருசொட்டு கூட வீணாக்காமல் பாதுகாக்க கடந்த 15 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அதற்காக எல்லா ஆறுகளிலும் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும் என்று வரைவு அறிக்கையை அரசுக்கு அனுப்பி உள்ளோம். இதுதொடர்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி, கொள்ளிடம், பவானி சாகர் ஆகிய ஆறுகளையும் அணைகளையும் பார்வையிட்டு அங்கு தடுப்பணைகள் கட்டவும், பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தவும் பிரசார பயணம் செய்தார். அதேபோல வைகையை காப்போம், வறட்சியை விரட்டுவோம் என்ற கோ‌ஷத்துடன் மூல வைகை உற்பத்தியாக கூடிய மேகமலை முதல் வருசநாடு, ஆண்டிப்பட்டி, வைகை அணை வழியாக மதுரையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதேபோல, நாளை விரகனூர் மதகு அணை, திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர் மதகு அணை, பரமக்குடி வைகை ஆறு ஆகியவற்றை பார்வையிட்டு மாலையில் ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். வைகை ஆற்றில் மாசு கலப்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகக்கூடிய தாமிரபரணி, வைகை ஆறுகளின் தண்ணீரை ஏரி, குளங்களில் தேக்கி வைத்து முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கொள்ளை காரணமாக வைகை அணையில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் இன்னும் பாசன பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. மணல் கொள்ளையால் தமிழக ஆறுகளில் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் பாதி அளவிற்கு தேங்கி உள்ள சேறு சகதியை அகற்ற வேண்டும். ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விட்டது.

ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்களை தூர்வாரி வைகை தண்ணீரை விடவேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கேரள வெள்ள பாதிப்பிற்கும், முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கும் தொடர்பு இல்லை. அழகிரி, ஸ்டாலின் விவகாரம் உள்கட்சி பிரச்சினை. அதில் கருத்து கூறவிரும்பவில்லை. பாராளுமன்ற தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாக குழு முடிவுசெய்யும். இவ்வாறு கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் ஹக்கீம், மாவட்ட நிர்வாகி சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story