பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிர்ப்பு: வேளாண் விளை பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்
வேளாண் விளை பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்க கூடாது என்று முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அவர், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் வேளாண் வணிக துறை அதிகாரிகள் பேசினர். அவர்கள் பேசும் போது, விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளை பொருட்களை பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து, அதை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யும் திட்டம் குறித்து எடுத்து கூறினர். இந்த திட்டத்திற்கு விவசாயிகள் அனைவரும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் பேசிய விவரம் வருமாறு:–
வேளாண் விளைபொருட்களை பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்வது பொதுமக்களை மட்டுமின்றி விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். இதற்கு பதிலாக தமிழக அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யலாம். இதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அரசிடம் உள்ளது. கூட்டு பட்டாவில் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும்.
குளங்கள், குட்டைகளில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் மழைநீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே நீர் மேலாண்மைக்கு என்று தனி துறையை உருவாக்க வேண்டும். மேலும் மாவட்டம் தோறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், நீர் மேலாண்மை வல்லுனர்கள் அடங்கிய குழுக்களை ஏற்படுத்தலாம்.
கட்டுப்படுத்த வேண்டும்கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் தென்னை மரங்கள் பட்டுபோய் விடுகின்றன. எனவே கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள்தான் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே உயிரிக்கொல்லி மூலம் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
பழனிசாமி (தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழு தலைவர்):–
வேளாண் விளை பொருட்களை, பன்னாட்டு நிறுவனங்கள் நேரிடையாக கொள்முதல் செய்வது குறித்து அரசு விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும். கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலை யத்தில் பல்வேறு புதிய ரக கரும்புகள் கண்டறியப்பட்டது. தற்போது இந்த கரும்பு ஆராய்ச்சி நிலையத் தை வேறு பகுதிக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது. பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியா முழுவதும் விவசாயிகள் மற்றும் அரசிடம் இருந்து கடந்த 2016–17–ம் நிதியாண்டில் ரூ.22,180 கோடியும், 2017–18–ம் ஆண்டில் 24,454 கோடியும் காப்பீட்டு தொகையாக வசூலித்து உள்ளது.
ஆனால் விவசாயிகளுக்கு நஷ்டஈடு தொகையாக மிக சொற்ப அளவுக்குதான் திருப்பி வழங்கி உள்ளது. இதனால் ஆண்டுதோறும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 9 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் சம்பாதிக்கின்றன. விவசாயிகளுக்கு எவ்வித பலனும் இல்லை. எனவே அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நீலம்பூர் ஊராட்சியில் உள்ள 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆச்சான்குளம் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. அதை தூர்வாரி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதவ் காட்கில் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
மேலும் முறையீட்டு கூட்டத்தில் வனத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.