மோட்டார் சைக்கிளில் சென்ற போது மின்னல் தாக்கியது; காண்டிராக்டர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற போது மின்னல் தாக்கியது; காண்டிராக்டர் பலி
x
தினத்தந்தி 1 Sept 2018 5:30 AM IST (Updated: 1 Sept 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனியாக வந்த காண்டிராக்டர், மதுரை அருகே மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமங்கலம்,

சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவருடைய மகன் ஆனந்தகுமார் (வயது 35). கட்டிட காண்டிராக்டர். இவர் வேலை சம்பந்தமாக சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனியாக தூத்துக்குடியை நோக்கி வந்தார்.

மதுரையை கடந்து அவர் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் விலக்கு பகுதியில் நேற்று மாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

தலைக்கவசம், மழை கோட்டு அணிந்துகொண்டு மழையில் நனைந்தபடியே ஆனந்தகுமார் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது திடீரென மின்னல் தாக்கியது.

இதில் உடல் கருகி, மோட்டார் சைக்கிளோடு சாலையோரத்தில் சாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தலைக்கவசமும் கருகிப் போய் கிடந்தது.

இந்த விபரீத சம்பவம் குறித்து அந்த பகுதியில் சென்றவர்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று, ஆனந்த குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

சம்பவம் குறித்து ஆனந்தகுமாரின் பெற்றோர், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மதுரை அருகே மின்னல் தாக்கி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Next Story