தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதல்: குரோம்பேட்டை மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி


தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதல்: குரோம்பேட்டை மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 1 Sept 2018 3:45 AM IST (Updated: 1 Sept 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தடுப்பு சுவரில் மோதி, பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய மகன் மதிவாணன் (வயது 16). இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

மதிவாணனுக்கு அவருடைய தந்தை புதிதாக மோட்டார்சைக்கிள் வாங்கி கொடுத்தார். அதில் அவர், தனது நண்பர் விஜய்பிரகாஷ் (16) என்பவருடன் தாம்பரம் சென்றுவிட்டு திரும்பினார்.

வாலிபர் பலி

குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அப்போது மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பின்னால் அமர்ந்து இருந்த விஜய்பிரகாஷ், தூக்கி வீசப்பட்டு சுமார் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மதிவாணன், படுகாயங்களுடன் மேம்பாலத்தில் விழுந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து காயங்களுடன் கிடந்த மதிவாணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கஞ்சா பொட்டலம்

பின்னர் பலியான விஜய் பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்தபோது புதிதாக வாங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும் இருக்கையின் அடியில் 250 கிராம் எடைகொண்ட கஞ்சா பொட்டலம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேருக்கும் ஓட்டுனர் உரிமம் கிடையாது. இருவரும் ஹெல்மெட்டும் அணியவில்லை.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கஞ்சா பொட்டலத்தை அவர்கள் எங்கிருந்து வாங்கி வந்தனர்? என விசாரித்து வருகின்றனர்.

Next Story