சிறப்பு முகாம் நடத்தி சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை


சிறப்பு முகாம் நடத்தி சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Sept 2018 4:00 AM IST (Updated: 1 Sept 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு முகாம் நடத்தி சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கடந்த கூட்டத்தில் விவசாயிகள் கொடுத்த கோரிக்கைகள் மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

அதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு கிடைக்க பெறவில்லை என்று கோரிக்கை வைத்துள்ளர்கள். சான்றிதழ் கிடைக்காதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளர்கள். தற்போது உத்தனப்பள்ளியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படும்.

வனத்துறை சார்பில் தரிசு நிலங்களில் வேம்பு, சில்வர்வோக், நாவல் போன்ற மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு நில பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை வனத்துறை அலுவலகத்தில் அளிக்கும் பட்சத்தில் மரக்கன்றுகள் மற்றும் ஊக்க தொகை வழங்கப்படும். தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் இ.சி.எஸ். முறையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மானிய தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும்.

ஓசூர், சானமாவு, வேப்பனப்பள்ளி பகுதிகளில் உள்ள கிராம சாலைகளை கனிம வள நிதியாதாரம் மூலம் தரமான சாலைகளாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எண்ணேகொல் நீர் ஆதார திட்டம் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசித்து பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எஸ்.முதுகானப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பயணிகளுக்காக நிழற்குடை அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் கழிப்பிடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும்.

அரசு அலுவலர்கள் மூலம் எந்தந்த ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும் என்று ஆய்வு செய்து ஏரிகளில் உள்ள வண்டல் மண்களை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கைகள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய விளக்கம் அளிக்கப்படும். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருந்திய நெல் சாகுடி, வேளாண்மை திட்ட விளக்க கையேடுகளை கலெக்டர் பிரபாகர் வெளியிட்டு விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர்கள் தீபக் பில்கி, பிரீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுசீலாராணி, பொதுப்பணித்துறை துறை உதவி செயற்பொறியாளர் நடராஜன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கர், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், மத்தூர் ஒன்றிய செயலாளர் ரவீந்தராசு உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story