மின்வாரிய ஊழியர் அடித்துக்கொலை கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை


மின்வாரிய ஊழியர் அடித்துக்கொலை கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Sept 2018 4:30 AM IST (Updated: 1 Sept 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே மின்வாரிய ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள குண்டுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரலப்பா (வயது 45). இவர் உத்தனப்பள்ளியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமம்மா (35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள கோபாலப்பா என்பவரின் பாழடைந்த வீட்டின் அருகில் சக்கரலப்பா பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்கரலப்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் சக்கரலப்பா அடித்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சக்கரலப்பா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.மேலும் கொலையுண்ட சக்கரலப்பாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சாக்கம்மா (45) என்ற விதவை பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. சக்கரலப்பா இரவு நேரத்தில் சாக்கம்மா வீட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனிடையே நேற்றுமுன்தினம் இரவு சக்கரலப்பா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட சக்கரலப்பாவின் உடலை சூளகிரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சக்கரலப்பாவை கள்ளக்காதலி சாக்கம்மா அடித்துக்கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் அடித்துக்கொலை செய்து உடலை அங்கு போட்டு சென்றார்களா? என சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சக்கரலப்பாவின் கள்ளக்காதலி சாக்கம்மாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story