பெரம்பலூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.88 கோடி கடன் வழங்க இலக்கு


பெரம்பலூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.88 கோடி கடன் வழங்க இலக்கு
x
தினத்தந்தி 1 Sept 2018 4:00 AM IST (Updated: 1 Sept 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.88 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுக்கு நிதி உள்ளாக்கம், நிதியியல் கல்வி மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பாக ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.

பயிலரங்கத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.88 கோடி கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கியாளர்கள் மேற்காணும் இலக்கினை நிறைவேற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் கடன் உதவி வழங்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க முன்வர வேண்டும். மேலும் சிறந்த தொழில் முனைவோர் குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு கடன் உதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் சாந்தா, வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 31 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 84 லட்சம் வங்கி கடன் இணைப்பை வழங்கினார்.

பயிலரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் தேவநாதன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

Next Story