செங்குன்றம் அருகே புதரில் பட்டா கத்திகளுடன் பதுங்கிய 5 பேர் கைது 30 செல்போன்கள் - 8 கத்திகள் பறிமுதல்
செங்குன்றம் அருகே புதரில் பட்டாக்கத்திகளுடன் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த காந்திநகர், அம்பேத்கர் அலமாதி எடப்பாளையம் ஆகிய பகுதிகளில் சமீபகாலமாக செல்போன் பறிப்பு மற்றும் வழிபறி சம்பவங்கள் அதிக அளவு நடந்தது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, பொன்னேரி டி.எஸ்.பி ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
பதுங்கிய 5 பேர் கைது
செங்குன்றம் அருகே உள்ள எடப்பாளையத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒரு புதரில் கத்திகளுடன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று எடப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே புதரில் சோதனை போட்டனர். அப்போது புதரில் இருந்து போலீசாரை கண்டதும் 5 பேர் தப்பி ஓடினார்கள். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் எடப்பாளையத்தை சேர்ந்த நவீன்(வயது 18), மனோ(18). செல்வம் (18) கேசவன்(19) அருண்(19) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 8 பட்டா கத்திகள் 30 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story