சீர்வரிசை பொருட்கள் கேட்டதால் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து காதல் மனைவி போராட்டம்


சீர்வரிசை பொருட்கள் கேட்டதால் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து காதல் மனைவி போராட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2018 4:30 AM IST (Updated: 1 Sept 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே காரணி பாட்டை கிராமத்தில் 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கேட்டதால் காதல் மனைவி தனது கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள காரணி பாட்டை கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது24) சொந்தமாக கார் வைத்துக்கொண்டு வாடகைக்கு ஓட்டி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (22). நர்சிங் படித்துள்ளார். விஜய்யும், கவுசல்யாவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த மே மாதம் விஜய் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது.

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவுசல்யா விஜய்யிடம் கேட்டார். விஜய் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கவுசல்யா ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் சமரசம் செய்து கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.

சீர்வரிசை

தாய் வீட்டுக்கு சென்ற கவுசல்யா மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது விஜய், அவரது தாய் உஷா, விஜய்யின் சகோதரி சிவரஞ்சனி ஆகியோர் 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொண்டு வர வேண்டும் என்று கேட்டனர். இதுகுறித்து கவுசல்யா கடந்த 28-ந் தேதி ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் கணவன்-மனைவி இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த உடன் விஜய் மற்றும் அவரது தாய் இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு அருகில் உள்ள விஜய்யின் சகோதரி சிவரஞ்சனி வீட்டுக்கு சென்று விட்டனர்.

போராட்டம்

தனது கணவன் மற்றும் மாமியார் தன்னை வீட்டின் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கவுசல்யா பூட்டியுள்ள தனது கணவர் வீட்டின் முன்பு நேற்றுமுன்தினம் முதல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக மகளிர் சுய உதவி குழுவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story