பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்புவதில் பரிதவிப்புகள்: பஸ், ஆட்டோக்களில் மாணவர்கள் ஆபத்து பயணம்
பஸ், ஆட்டோக்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி,
தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது தொடர் கதையாக உள்ளது. குச்சனூரில் இருந்து தேனிக்கு வரும் பஸ்களில் குச்சனூர், பாலார்பட்டி, கூழையனூர், உப்புக்கோட்டை, போடேந்திரபுரம், காமராஜபுரம், பழனிசெட்டிபட்டி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயணம் செய்கின்றனர். ஆனால், அங்கு இருந்து தேனிக்கு வருவதற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பஸ் படிக்கட்டுகளில் மாணவ, மாணவிகள் தொற்றிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிப்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் கிராமங்களில் இருந்து மினி பஸ்களில் நிற்கக்கூட இடமின்றி பரிதவிப்போடு தேனியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். இங்கும் காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
தேனியில் இருந்து கொடுவிலார்பட்டி, காமராஜபுரம், ஓடைப்பட்டி பகுதிகளுக்கு செல்லும் பஸ்களிலும் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிக அளவில் உள்ளது. தேனியில் இருந்து சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
பஸ்களில் நிரம்பி வழியும் கூட்டம் காரணமாக ஆட்டோக்களிலும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் பயணம் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோக்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், ஆட்டோ டிரைவர்கள் கட்டுப்படியாக வேண்டும் என்பதற்காக அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். மாணவ, மாணவிகளும் ஆட்டோக்களில் பயணம் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்புவதே பரிதவிப்பு மிக்கதாக மாறி உள்ளது. ஆபத்து பயணங்களால் மாணவ, மாணவிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. பெரும் சோகம் ஏற்படும் முன்பு உரிய விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
எனவே, மாவட்டம் முழுவதும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயணம் செய்யும் பகுதிகள் குறித்து நேரடி ஆய்வுகள் நடத்தி தேவையான இடங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story