யாதகிரி உள்ளாட்சி தேர்தலில் மோதல்: காங்கிரஸ்-பா.ஜனதா தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதல்


யாதகிரி உள்ளாட்சி தேர்தலில் மோதல்: காங்கிரஸ்-பா.ஜனதா தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதல்
x
தினத்தந்தி 1 Sept 2018 4:00 AM IST (Updated: 1 Sept 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

யாதகிரியில் உள்ளாட்சி தேர்தலின் போது காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சியினரும் கற்களை வீசி தாக்கினார்கள்.

பெங்களூரு, 

யாதகிரியில் உள்ளாட்சி தேர்தலின் போது காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சியினரும் கற்களை வீசி தாக்கினார்கள். இதில், 2 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

மேலும் கொப்பலில் தகராறில் ஈடுபட்ட காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கற்களை வீசி தாக்குதல்

கர்நாடகத்தில் நேற்று 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது நேற்று காலையில் யாதகிரி மாவட்டம் சுரபுரா டவுனில் உள்ள வாக்குச்சாவடி முன்பாக வாக்காளர்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே இரு கட்சிகளின் தொண்டர்களும் மோதிக் கொண்டனர். மேலும் இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கினார்கள். இதில், 2 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் சுரபுரா போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனே அங்கு நின்ற காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் சுரபுரா பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

போலீஸ் தடியடி

இதுபோல், கொப்பல் (மாவட்டம்) புறநகர் கமலாரா காலனியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வேறு கிராமங்களை சேர்ந்தவர்களை அழைத்து வந்து காங்கிரஸ் வேட்பாளர் கள்ள ஓட்டுப்போட வைப்பதாக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த தொண்டர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். இதுதொடர்பாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தொண்டர்கள் இடையே தகராறு உண்டானது. அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டதுடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்கள்.

இதையடுத்து, இரு கட்சிகளின் தொண்டர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று, பாகல்கோட்டை, பெலகாவி, பல்லாரி மாவட்டத்திலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) தொண்டர்களிடையே நேற்று தகராறு ஏற்பட்டது.

Next Story