கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது.
மண்டியா,
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணை மற்றும் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் பீச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்கள் திகழ்கிறது. இந்த இரு மாவட்டங்களில் மழை பெய்தால் தான் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் குடகு, வயநாடு மாவட்டங்கள் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் என அழைக்கப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் இரு அணைகளும் கடந்த 2 மாதங்களில் 2 தடவை நிரம்பியது. இந்த நிலையில் வயநாடு மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்ததால், கபினி அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது. அதே வேளையில் குடகு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதுடன் கே.ஆர்.எஸ். அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது.
முழுகொள்ளளவில் கே.ஆர்.எஸ். அணை
இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை நேற்று முன்தினம் 3வது முறையாக நிரம்பியது. அணைக்கு தொடர்ந்து கணிசமான அளவு நீர்வரத்து உள்ளது. இதன் காரணமாக நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவிலேயே உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,377 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10,184 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தின் ஒரு பகுதி தான் கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. தற்போது அந்த பகுதியில் மழை குறைந்துவிட்டதால் நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10,749 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 11,583 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,282.91 அடியாக இருந்தது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
இரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்படும் நீர் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் சங்கமித்து தமிழகத்திற்கு சென்று வருகிறது. அதன்படி நேற்று இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 21,767 கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது.
நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் சென்றது குறிப்பிடத்தக்கது. அதாவது நேற்றுமுன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்றைய நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் சுமார் ஆயிரம் கனஅடி நீர் அதிகமாக தமிழகத்திற்கு செல்கிறது.
Related Tags :
Next Story