ஸ்ரீபெரும்புதூரில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை; ரூ.2½ லட்சம் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
வாலாஜாபாத்,
ஸ்ரீபெரும்புதூர் பட்டு நூல் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 34). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வல்லக்கோட்டையில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்காக நேற்று காலை 6 மணி அளவில் சென்றார்.
பின்னர் அவர் திருமணம் முடிந்து காலை 11 மணிக்கு குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
20 பவுன் நகை - பணம் கொள்ளை
பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகள், மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story