விவசாயிகளுக்கான நிலுவை தொகை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும்: கலெக்டர் தகவல்
போளூர் தனியார் சர்க்கரை ஆலை மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை இந்த மாத (செப்டம்பர்) இறுதிக்குள் வழங்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் சிலர் கோடிக்கணக்கில் போலி ஆவணங்கள் மூலம் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கூட்டுறவு சங்கத்தில் மோசடியில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செயலாளர்கள் அதே சங்கத்தில் மீண்டும் பணி புரிகிறார்கள். அவர்களை பணி மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து துறையும் கணினி மயமாக்கப்பட்டு வரும் நிலையில் கூட்டுறவு துறையையும் கணினி மயமாக்க வேண்டும்.
விவசாயிகளை, பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். ஆனால் விளைச்சலின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை அதிகாரிகள் பெற்று தருவதில்லை. எதற்காக நாங்கள் இன்சூரன்ஸ் கட்ட வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஏரி, கால்வாய்களை தூர்வார வேண்டும். வேளாண்மை துறை மூலம் பெறப்பட்ட மணிலா பயிர் விளைச்சல் இன்றி உள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மிருகண்டா அணையை பராமரிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்ததாக போலி ரசீதுகள் கொடுக்கப்பட்டு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமராமத்து பணிகள் மூலம் தண்டராம்பட்டு பகுதியில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். கண்ணமங்கலம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் கூட்டத்தில், போளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.16 கோடி 70 லட்சம் நிலுவை தொகை வழங்க வேண்டும். இந்த தொகையை உடனே பெற்று கொடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக கலெக்டரின் முன்பு தரையில் அமர்ந்து மனு அளிக்க வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் பேசுகையில், எங்களுக்கு நிலுவை தொகை வழங்க வில்லை என்றால் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். இதையடுத்து கலெக்டர், போளூர் தனியார் சர்க்கரை ஆலை சார்பாக வந்திருந்த அதிகாரியிடம் பேசினார். அப்போது அந்த அதிகாரி, இந்த மாதம் இறுதிக்குள் நிலுவை தொகை வழங்கப்படும் என்றார். அதற்கு கலெக்டர், இந்த மாத இறுதிக்குள் நிலுவைத் தொகை வழங்க வில்லை என்றால் உங்கள் சர்க்கரை ஆலைக்கு சீல் வைக்கலாமா? என்று கேட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் மேஜையை தட்டினர்.
இதையடுத்து அந்த அதிகாரி தன்னுடைய மேல் அதிகாரியிடம் பேசிவிட்டு வருவதாக கூறினார். அவர், அவரது மேல் அதிகாரியிடம் பேசிவிட்டு வந்து கலெக்டரிடம் பேசினார். அதைத்தொடர்ந்து கலெக்டர், விவசாயிகளிடம் கூறுகையில், ‘போளூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்குவதாக எழுத்துப் பூர்வமாக அளிக்க ஒப்பு கொண்டு உள்ளனர்’ என்றார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் இணை பதிவாளர் நந்தகுமார், வேளாண்மை துறை இணை இயக்குனர் செல்வசேகர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story