சோளிங்கர் ரெயில் நிலையம் அருகே உயரழுத்த மின்கம்பிகள் அறுந்துவிழுந்ததால் ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்


சோளிங்கர் ரெயில் நிலையம் அருகே உயரழுத்த மின்கம்பிகள் அறுந்துவிழுந்ததால் ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 1 Sept 2018 5:45 AM IST (Updated: 1 Sept 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் ரெயில் நிலையம் அருகே உயரழுத்த மின்கம்பிகள் அறுந்துவிழுந்ததால் ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் அதிகாரிகளுடன், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பனப்பாக்கம், 

பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ரெயில் நிலையத்திற்கும், தலங்கை ரெயில் நிலையத்திற்கும் இடையே தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான உயரழுத்த மின்சார கம்பிகள் செல்கின்றன. நேற்று காலை 7 மணி அளவில் இந்த உயரழுத்த மின்சார கம்பிகள் அறுந்து ரெயில்களுக்கு செல்லும் மின்சார கம்பிகள் மீது விழுந்தது.

இதனால் ரெயில்களுக்கு செல்லும் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து கோவை சென்ற சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ், அரக்கோணத்தில் இருந்து வேலூர் சென்ற பயணிகள் ரெயில், சென்னையில் இருந்து மைசூர் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள்டெக்கர் எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

இதனால் ரெயில்களில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்கள் அவதிக்குள்ளானார்கள். நீண்ட நேரம் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ரெயில்நிலைய நடைமேடையில் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர்.

இந்த நிலையில் ரெயில்வே ஊழியர்களும், பாணாவரம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வந்திருந்த ஊழியர்களும் அறுந்துவிழுந்த மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அறுந்துவிழுந்த மின்கம்பிகளை சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து அனைத்து ரெயில்களும் 3 மணிநேரம் தாமதகாக புறப்பட்டு சென்றன.

Next Story