ஈரோடு மாவட்டத்தில் 18 லட்சத்து 42 ஆயிரத்து 390 வாக்காளர்கள்: வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


ஈரோடு மாவட்டத்தில் 18 லட்சத்து 42 ஆயிரத்து 390 வாக்காளர்கள்: வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:15 AM IST (Updated: 1 Sept 2018 7:46 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 18 லட்சத்து 42 ஆயிரத்து 390 வாக்காளர்கள் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டார்.

ஈரோடு,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நேற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

ஈரோடு மாநகர் பகுதிக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கானிடம் வழங்கினார். பிற தொகுதிகளுக்கான பட்டியலை ஈரோடு ஆர்.டி.ஓ.(பொறுப்பு) ஜெயராமன் பெற்றுக்கொண்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் வரைவு வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் வெளியிடப்பட்டு உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 18 லட்சத்து 42 ஆயிரத்து 390 என்ற எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 9 லட்சத்து 4 ஆயிரத்து 432 பேரும், பெண்கள் 9 லட்சத்து 37 ஆயிரத்து 888 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 70 பேர் வாக்காளர் பட்டியில் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் மொத்தம் 18 லட்சத்து 37 ஆயிரத்து 652 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது கூடுதலாக 4 ஆயிரத்து 738 பேர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபோல் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக 37 இடங்களில் 98 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதன்படி மொத்தம் 912 இடங்களில் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடிகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை தொடர் பணிகளாக நடந்து வருகின்றன. இதற்காக புதிய மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் இதுவரை 480 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் போன்றவற்றுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வருகிற 9–ந் தேதி, 23–ந் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 7–ந் தேதி, 14–ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் 1–1–2019 அன்று 18 வயது பூர்த்தியாகிறவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவங்களை வாக்குச்சாவடி முகாம்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதலுக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் உதவி செய்ய வேண்டும். இறுதி நேரத்தில் ஒட்டுமொத்தமாக விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் பகுதியில் நிரந்தர முகவரி மாற்றம், மரணம் அடைந்தவர்களின் விவரங்களை சரியாக தெரிவித்து உதவ வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 33 ஆயிரத்து 456 பேர் அதிகம் உள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.நர்மதாதேவி, தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story