புதிதாக பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 1.1.2019–ஐ தகுதி நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் வாக்காளர்கள் விவரம் குறித்து பட்டியலில் சரிபார்த்து கொள்ளலாம். மேலும் புதிய வாக்காளர்களை இந்த மாதம் மற்றும் அக்டோபர் மாதங்களில் பெயரை சேர்க்கலாம். அனைத்து வாக்குச்சாவடியிலும் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
அத்துடன் வருகிற 9 மற்றும் 23–ந்தேதிகளிலும், அடுத்த மாதம் 7 மற்றும் 14–ந்தேதிகளிலும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம்கள் மற்றும் கிராம சபை கூட்டங்கள் நடத்தி, அதன் மூலம் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கிடவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுபட்ட நபர்கள் இந்த முகாமில் புதிய வாக்காளராக பெயர் சேர்த்துக்கொள்ளவும் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் குறித்த பணிகளை மேற்கொள்ளலாம்.
இதேபோல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்கள் பிரதிநிதிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான கருத்துக்களை எப்போது வேண்டுமானாலும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம். அதற்குரிய நடவடிக்கை உடனுக்குடன் மேற்கொள்ளப்படும். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் 25–ந்தேதி வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.